Thursday, 18 August 2022

பயணம்

வானூர்திக் கழுகுகள்
வட்டமிடும் விமான நிலையம்

அதிகாலை குளித்து அவசரமாய் ஒப்பனை முடித்து நீண்ட தணிக்கையின் முடிவில் கிடைத்தது ஓர் இருக்கை.
தனியான முனையத்தில் செல்போன் இரைசல் இன்றி மனிதர்களின் தடகளின்றி

வரிகளை செதுக்குகிறேன் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நீளம்.
தோழமையாய் ஓர் கோப்பை இருப்பக்கமான காத்திருப்பு முகம் புதைக்கும் அலுப்பு போலியான வாழ்த்துரைகளின் சலிப்பு என கரைகளற்ற ஓடாயாய் நீள்கிறது.
எல்லா பயணங்களும் எதோ ஓர் எதிர்பார்ப்பையும் உரையாடலிற்கான ஒத்திகையையும் தன்னுள் புதைத்து வைத்துள்ளது.

கருவாசல் பயணத்தின் பின் முதன் முதலாய் இரயில் வாசம் மூச்சு விடும் புகைவண்டியின் மெல்லிய தாலாட்டு.

பின்னாளில் வந்த பேருந்துகள்

எம் நவீன பண்டைமாற்று தனிமையை பெற்றுக்கொண்டு கடனாய் குடுத்தன வரிகள்.
அரவணைக்கும் இருளில் அவளைப் போலவே கண்ணாம்பூச்சி காட்டி கடந்து செல்கின்றன கனவுகள்.


அருகருகே அமர்ந்தலும்

மனதருகே அவர் சொந்தமில்லை

தொலைவில் இருப்பவரை

அருகே அழைத்தாலும்

பேசிக் கொள்ள வார்த்தை அமைவதில்லை.


வார்த்தைகள் எல்லாம் தோற்பின்

கைக்குட்டையில் கண்ணீரை அடைத்து

பின் எப்பொழுதோ வரும் நாளை

எதிர்நோக்கி செல்கிறது

இன்றைய பயணம்.


வானூர்த்தி ஏறியவுடன் தாய் மடியின் கதகதப்பில் எனை சூழும் உறக்கம். எல்லா பயணங்களும் எங்கோ ஓரிடத்தில் முடியதான் வேண்டும் அவள் பாதங்களில் என் காதல் சேர்வது போல.

©Deepakbioinfo.blogspot.com


Thursday, 11 August 2022

இரக்‌ஷா பந்தன்


அன்பு தங்கை மனோவிற்கு
தொலைவிலிருந்து
இன்னும்- தொலைந்திடாத 
அண்ணன் எழுதுவது.

அண்ணன் என்ற உரிமை
நானே எடுத்துக்கொண்டது
ஓர் சக பயணிப் போல்
நானும் தீபியும்
உங்களுடனே பயணிக்கிறோம்.

ஒரே அலைவரிசையில்
எதிர்பார்போடு
ஏற்றஇறக்கங்களை
அவரவர் பார்வையில்
கடப்பவர்களுக்கு
வார்த்தை பாலம் எதற்கு?

இரக்‌ஷா பந்தன் எனில்
பாதுகாப்பு பந்தமாம்
தங்களை பற்றி நினைக்கையில்
நான் இப்பந்ததை
எப்படி பாதுக்காப்பது என்றே
நிதம் எண்ணுகிறேன்.

நினைவில் நிற்கும்படி
தங்களிற்காக நான் ஏதும்
நின்றதில்லை.
உங்களின் தோழராக
உடன் அமர்ந்துக்
நினைவுகள் செதுக்கியதில்லை
சொல்லாலான வருத்தகளை
எம் ஆறுதல் சொல்
வருடியது இல்லை.

என் தங்கை பல்துறை செல்வி
கலை பொருட்களின் களஞ்சியம்
பயண தொகுப்பின் ஆவலர்
உன்குழாய் கானொளியில்
முளைத்த புதிய சிறகு
அனைத்திற்கும்
நான் தூரத்து பார்வையாளன்
கைதட்டல் கேட்கா தூரம்
ஆனால் உங்கள் திறமையை
நான் வியக்கா நாளில்லை.

ஓர் விடுமுறையின் பின்னிரவில்
விருப்ப  உணவு சமைத்து
கதை பேசும் காலம்
இன்னும் காத்திருக்கிறது.

செவி வழி செய்தியாகவே
உங்கள் பாதைகளையும்
தன்னம்பிக்கையும் அறிந்திருக்கிறேன்.

ஏங்கிய சில உறவுகள்
இன்னும் எனக்கு எட்டாக்கனி
ஒரு வேளை
இறைவன் இப்பிறவியில்
சகோதர வேடத்தை ஒத்திகையித்து
மறுப்பிறப்பிற்கு ஆயத்தம்
செய்கிறார் போலும்.

ஓர் சோதரனாய்
வாழ்ந்து எழுதிய இவ்வரிகள்
நான் பேச எண்ணிய
சொற்களின் தொகுப்பு.

என் தனிமை நேர எண்ணங்களும்
தீபியுடன் தேநீர் உரையாடலும்
தங்களிர்கான நன்றியுரை
நலம் வாழ்த்தும் கலந்திருக்கும்.

பந்தினுள் காற்றினை போல் உறவுகளை உள்ளத்தினுள் அடைத்திட முடியாது
நான் எழுதியதை
உங்களிடம் ஓர்
அலைபேசி அழைப்பினில்
கடத்தி இருக்கலாம்.

என் மனம் ஓர் தனிமை நாட்குறிப்பு
முகமறிந்து  அவர்தம் உடனிருக்கும்
மனோ இயல் அறியேன்.
மடல் எழுதும் முறை
இன்றும் இருந்தால்
தங்களிற்கும் இராகேஷ்ற்கும்
வார மடல் வரைந்திருப்பேன்.

காலங்கள் ஓடலாம்
மாற்றங்கள் பூக்கலாம்
பேசிய சொற்கள் கரையலாம்
இவ்வரிகள் என்றும் இங்கிருக்கும்
எம் மனதிலும் இருக்கும்
இனிய இரக்‌ஷா பந்தன்.







Wednesday, 3 August 2022

இளன்

 

ஆஸ்டினின் புதிய சந்திரன்
சொட்டும் ஊற்றின் பொன்னிற ஓடை
பாயினில் தவிழும் கண்ணன்

எங்கள் இளங் கோவின் ராஜகுமாரன்.


பார் புகழும் கன்னக்குழி அரசன்

பாலகன் அவன்- கரங்கள் நீட்டிய

மிகு வெண் நிலவழகன்

மடியில் கிடத்தி

வெண் சுதா ஊண்டபின்

ஆழ் துயில் கொள்வான்.


புன்னகை இழையோடிய இழன்.

சிந்தை கூர்மையால்

துன்பங்கள் இலன்.

பாரதியின் தமிழ் ஊட்டி

பாட்டன் கைககளில் தவழும்

எங்கள் செல்ல இளன்

Sunday, 19 December 2021

கவிதையின் காதலன்

கைகளில் அடங்கும் நவயுகத்தில்
அனைத்தும் சலித்துவிடும்.
காதலா, அலைபேசு
கோபமா, டிவிட்டரில் கீச்சு
என்னும் கோபமா,
முகத்தோடு எதிர்கொள்ள வேண்டாம்
முகநூலில் தடை செய்தால் போதும்.

இரசனைகள் மாறுகையில்
உணர்வுகளுக்கும் இனி பஞ்சமோ?
முதல் ஸ்பரிசமும் முத்தமும்
காணொளியில் களித்து
சமுக இடவெளியென
மனமுறிவை பெருக்கி
எதனை நின்று இரசிக்க மறந்தோம்?

துரித உணவு காலமிது
கலவியை கடந்ததோர் படுக்கையில்
ஒரு கண் ஆர்வத்தால்
இன்துணை மேல் வைத்துறங்கும்
அன்றிலின் காதல்
தலைமுறை கண்ட பழமையோ?

கணிணியில் மின்னஞ்சல் செய்தால்
உணர்ச்சிகளின் கலவையினை
தேவைக்கேற்ப
இயந்திர ஊக்கிகள் கடத்துமோ?
கவிஞர்கள் தொல்லை இல்லை
எதுகை மோனையோடு
நிரல்களே தேம்பாவணி பாடும்.
இல்லத்தில் இருவரும்
தத்தமது மடியில்
இல்லாளை விடுத்து
செல்போனை கொஞ்சவோமோ?

உன் முடியினில் விளையாடும் கூடல்
காதலை பின்னோக்கி தீற்றினாலென்ன?
நான் ஏட்டிலிட்ட பழங்கதையாகவே
ஏந்தி கோதிட வேண்டுகிறேன்.

எண்ணை தோய்த்த முகத்தினில்
எளிதாய் தெளிவுரும் சருமம்
என் கற்பனைகள்  பொலிவுற
உன் நினைவினில்
சலவை செய்தால் போதாதா?

இவ்வாழ்க்கை உனை
ஆரதிக்காமல் போகுமாயின்
எம் தேகம் எரித்த கரித்துகளை
பென்சிலாக வடித்து
உனை வரையவே வேண்டுவேன்.

இவ்வசர யுகத்தின் கல்வெட்டுகளில்
தனிப்பெரும் காதலனாக
வாழ்ந்திருப்பேன் போதுமெனக்கு.

Saturday, 18 December 2021

தலைவியின் அருமையில்

கனவின் நுழைவாயிலில்
அருகருகே படுத்திருக்கிறோம்.
கைகள் இரண்டும் தீண்டிக் கொண்டே
ஒருவரில் ஒருவரர் கலந்திருப்போம்.

உள்ளம் கொண்ட வேட்கையோ
உடல் கொண்ட தடுப்பூசியோ
தேகம் முழுதும் சுடுகிறது.
தீபிகாவின் அருகாமையில்,
பற்றியெறிவது இயற்கையன்றோ!
என் பாதம் இரண்டும்
வலி கொண்ட பின்னே
அதனை ஏந்தியது-
உந்தன் கரங்களன்றோ

நம் உடலில் புத்துயிர் சேர்ப்பது இப்பேரன்பு அன்றோ
நாற்காலமும் மறந்து,
காதலென பிணைந்து, தீவொன்றில்
நாம் இருவரும் வாழ்வோம் வா.

என் வரிகள்
உன்னை கண்டால்
நெளிகிறது வெட்கத்தில்.
இதழ் கோர்த்து நீ படிக்கையில்
வார்த்தைகளும் புது இராகமாய் 
இனிக்கிறது என் செவிகளில்.
வேறு என்ன பேறு வேண்டுவேன்
என் தலைவியே
எம் வாழ்வு சிறப்புற்றதே
உந்தன் அன்பொளியில்!

Saturday, 4 December 2021

பிறந்தநாள்

கடற்கரையில நீ பார்க்க
கடலும் உன்னுடன் சேர ஓடிவரும்.
நீ உடுத்தும் உடைகள் கவிதைகளெனில்
உன் சேலை
தலைப்புடன் கூடிய கவிதை
நிலவை காட்டி
உணவை ஊட்டும் அம்மாவை போல்
உன்னை காட்டி
காதல் ஊட்டுகிறது வாழ்க்கை
"தீ"க்கதிரின் "பி"ன்னிருக்கும்"கா"ற்று
மேலெழுவது போல்
உன் முகம் என்றும் மேல் மலர உடனிருப்பேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பே.

பின்குறிப்பு:

இதை நான் எழுதவில்லை, 
என்னை எழுத வைத்த கவிதை நீ!

Sunday, 11 July 2021

சாரல்

கற்றை கூந்தல் சூடிய 
குட்டி மின்னல் இவளோ
ஆங்கிலத்தில் அழகு தமிழ் கொஞ்சும் 
தேன்மழை சாரல் இவளோ

உன் மழலைதனத்தோடு
பழகும் வேளையில்
இந்த சித்தார்த்தன் புத்தன் ஆகிறேன்
கடவுள் இவர்களுகளித்த பரிசோயென
எப்பொழுதும் இராகவை 
பார்த்து வியக்கிறேன்

இரவினில் உறக்கம் கொள்ள
செல்லம் கொஞ்சுகிறாய் அம்மு தனை
வாழ்வில் போதனைகள் எதற்கு கண்ணே
உன் குட்டி கைகளில் 
கழுத்தினை கட்டி கொண்டு 
காற்றாட நடந்தால் போதாதா?

களங்கமில்லா தூய உள்ளம்
பட்டாம்பூச்சியின் சிறகு விரித்து
இன்னும் பல சிகரங்கள் எட்டுவதற்கு
என் அன்பான வாழ்த்துக்கள்