Saturday 10 December 2022

அவள் கவிதை

 

ஒர் அமைதியான
அமெரிக்க நதியோர கிராமம்
குளிர்கால வரண்ட இரவில்
இல்லத்தின் தனிமை போக்க
ஊர் கூடி ஒளிவீசும்

எப்பொழுதும் மௌனம் வீசும்
அவள் முகம்
காட்டாறாய் உள்ளே அலைபாயும்
என் மனம்

யாம் இருவரும்
ஆற்றங்கரையில் அமர்ந்து
விரல் இடுக்கின் தேநீர் குடுவையில்
குளிர் போக்குகையில்
எதிர் இருக்கும் ஓடையின் நீளமாய்
அமைதி

எப்பொழுதும் அவள் தான் தொடங்குவாள்
"நீங்கள் கவிதை எழுதி
வெகு நாட்களாகிறது,
என் பிறந்தநாளன்று
வந்த வாழ்த்துகள்
உங்கள் கவிதையின் வரவையும் கேட்டன"

நான் சற்றே அமைதியாய்
"நானும் கொஞ்ச நாட்களாய்
தேடிக் கொண்டிருக்கிறேன்
என்னையும் கவிதைகளயும்"

அவள் இதழ் திறந்து கேட்கிறாள்
நான் இன்னும் துழாவி கொண்டிருக்கிறேன்
கவிதை நெருக்கமாய் வேண்டும்
ஆனால் கைவசம் இல்லை
திருட்டிலும் பழக்கம் இல்லை
அவள் இதயத்தை தவிர,
மேலும் என் எழுத்தின் முத்திரையாய்
அவள் பெயர் வேண்டும்

விசரம் தவிர்த்த தழுவலோடு
அவளை உச்சி முகர்த்து
நதியோரம் நடக்க அழைத்தேன்
அந்த இடைவெளி
கவிதை தந்துவிடும் ஓர் அவகாசமாய்

நேரம் தெரியாமல் நடந்தோம்
அவளிற்கு பசி வந்தது
இங்கு இன்னும் கவிதை வரவில்லை
மெதுவாய் அவளிடத்தில் சொன்னேன்
உனக்கு பிடித்த கவிதை
பிறகு சொல்கிறேன்
எனக்கு பிடித்த கவிதை
இப்பொழுது சொல்கிறேன்

அவளை அருகே அணைத்து
காதோரமாய் சொன்னேன்
"தீபிகா"