Saturday 30 March 2024

வலசை பறவை

 

இன்றும் உன் தலையணைனில்

தான் உறங்குகிறேன்

கடல் மீது வலசை போகும் 

வம்பை நாரைக்கு- 

மிதக்கும் மரக்கிளை கிடைப்பதைப் போல.


தனியாய் புலம் பெயர்ந்து

உன்னிடம் சேரும் வரை

சுற்றி இருக்கும் அமைதி

அலைகடலா முழுமதியா?

எதை கொண்டு அளவிடுவேன்.


நீ இல்லா இருளில் இருக்கிறேன்

ஒளியெல்லாம் நீ!

எதை பற்றி எழுதினாலும் 

என்னுள் நிரப்பும்

கவிதையெல்லாம் நீ!

உன் கைககளில் சேர

உறக்கமில்லாமல் காத்திருக்கிறேன்

காற்றில் குறைந்த

வாசமெல்லாம் நீ!


தீயின் குணம் 

பிடித்த அனைத்தும் தனதாக்கி கொள்ளும்.

காகிதங்களின் குணம்

பிடித்தவைகளை தன் மேல் படிந்து கொள்ளும்.

நான் நீ என்னும் தீ பிடித்த காகிதம்

உன்னால் நானும் தீ ஆனேன்.

உனக்காகவே எழுதும் காகிதமும் ஆனேன்

இன்னும் நூறு எழுதுவேன்

என் காதல் தீராது...

Wednesday 27 March 2024

இன்னும் ஒன்று

இரவினை முடிக்கும் உரையாடல் நீ

காலை பனியின் எழுகுரல் நீ

இத்தனை சரளமாய் 

எழுதும் தமிழும் நீ

ஏதோ இழந்து அலைகிறேன்

என் தேடலின் முடிவும் நீ.


வானத்தின் எடை கூடினால்

பெரு மழை பெய்யும்

உன்னை காணாது இருக்கும்

பெரும் பாரம் தனை

எதை கொண்டு பொழிவேன்.


நீ என்பது என்னுள் எழும் உணர்வு

நாசியினில் புகும் வாசம்

கனவினில் கேட்கும் கொலுசு.

மாதம்தோறும் உன் நகல் வேண்டினேன்

சத்தியமான இறைவனும் 

செவி சாய்க்கவில்லை இன்னும்.


இந்த வரிகள் 

உனக்குள் இறங்கவில்லை எனில்

என்னிடமே கேள்.


ஒளியென்பது 

சிலருக்கு அகல் விளக்கு

சிலருக்கு மின்குமிழி

சிலருக்கு மின்மினி


தீதும் நன்றும்

பிறர் தர வரா

காதல் நீ அன்றி எவர் தருவார்?

Sunday 24 March 2024

புல்லாங்குழல்


நீ அற்ற உரையாடல்கள் ஏனோ சலிக்கிறது

இங்கு நானாக படுக்கையில் எழுகிறேன்

இல்லை ஏதேனும் ஒன்றாக இருக்கிறேன்

சோழரோ உடையரோ எவர் நிலம் ஆயினும்

எனை ஆளும் காதல் தேசம் நீ.


கதவடைத்தக் கூடு எம்மனம்

எத்தனை முயன்றாலும்

பெண் பறவை அன்றி -

அன்றில் ஓசை இங்கு ஒலிக்காது.


என் சுயமியின் உருவம் நீ

இப்பொழுது பயணம் பிடிக்கவில்லை

உணவு வேளை தெரியவில்லை

இறகினை போல் காலத்தில் விழுகிறேன்

ஏதோ ஞாபகம் இல்லா வரிகள்

உன்னை பற்றி விழுந்து கொண்டிருக்கும்.


தீ பொறியென நீயாக பேசு என சொல்லாதே

பிடித்தமான குளிர் காற்று நான்

காற்று என்றும் மவுனம் கலைவதில்லை

புல்லாங்குழலில் புகும் வரை.

அல்லிக்குளத்து மீன்


நானும் தனிமையும்

நதியோரம் அமர்ந்திருக்கிறோம்

புறம் பற்றும் வெப்பம்

வெய்யில் சுடுவதாய் கூறியது

இன்றைய நண்பகல் அனல்

நீ அற்ற அகத்தனிமையை

விட கொஞ்சம் குறைவு தான் 


இந்த ஒரு வாரம்

நான் யாருடனும் பேசவில்லை

நீ அருகே இல்லாது 

எனக்கு ஏது சொற்களும் கவிதைகளும்

உன் அறைகளோடு சேர்த்து

என் மனதையும் தாழிட்டு செல்கிறாய்

-என்ன செய்வேன்?

நமக்கான எதிர்காலம் வேண்டி

இடைவெளிகளை ஏற்றுக்கொள்கிறேன்


இந்நதியின் ஓரம் 

அழகான ஓர் குளம் உள்ளது

அக்குளத்தினுள் அல்லியும்

ஓற்றை மீனும் உள்ளது


அக்குளத்தின் பெயர் அல்லிக்குளம்

குளத்தினுள் எத்தனை மீன்கள் இருத்தாலும்

என்றும் அது அல்லிக்குளம் தான்

அல்லி அழகானது என்பதினால் அல்ல

அல்லி தான் 

குளத்தின் இயற்கை அரண் 

அல்லி கொடியாயினும்

குளத்தின் உயிர்வாழ் அடித்தளம்


மீன்கள் அல்லியினை நோக்கி வாழும்

அல்லிக்கொடியினை சுற்றும் மீனாய் 

இங்கே இருளில் சுற்றுகிறேன்


தீப்பந்தத்திற்க்கும் வெண்ணிலவிர்க்கும்

இரவில் பூக்கும் அல்லிக்கு வேற்றுமை தெரியாதா?

பிடித்தமான விழிகள் யாதெனில்

காலையில் உன்னோடு விழிக்கும் கண்கள் தான்.

காதல் என்பதே நீயென்பதால்

இனி யாரோடு சாயும் இம்மனம்.