Friday, 27 October 2017

துடிப்பு

சிந்தைக் காட்டினில் மலர்ந்த மல்லிகை
மாலையில் மூடிடுமா?
கனவினில் உன்னை களவுகொடுத்தேன்
என் உறக்கம் தான் திரும்பிடுமா?

பாற்கடலினுள் ஆழ்ந்திருக்கும் முத்துச்சிப்பியே
முத்தம் பொழிந்து என்னுள் அடங்கு
காதலோடு அணைத்து கட்டிலில் கிடத்தி
மறுநாள் இம்சைகள் தொடங்கு.

காய்ந்த கண்ணீரிக்கு வினையான வெண்காயமே
உன் தினசரி வினாவிற்கு பதில்கேளடி
நாம் இணைவது உறுதியெனில்
என் இத்தனை கண்ணீர், அத்துணை துடிப்பு?

துணைவியே திருமணம் நம் இலக்கல்ல
வாழ்க்கைப் பயணம்!
குருதி ஓடி உயிர் வாழ்ந்திட
இதயம் துடித்தாக வேண்டும்
இன்றைய தேன் கிடைத்ததென
நாளை தேனீ நின்றிடுமா?

ஓட்டத்தின் ஒரு பகுதி விளக்கு
இன்று உன் கையினில் கொடுத்தேன்
காவிரி கரை கொண்டால் திருச்சி
காதலிற்கு தேவை உன் எழுச்சி
குழல் கூடி காற்றினை இசைத்திடுமா
மனதால் நம் கூடல் இசைந்திடுமா?

இந்த ஓட்டம் நாம் கொண்ட காதலானது
உனக்காய் வடிக்கும் கவிதையானது
மூப்பும் முதிர்வும் கொள்ளும் வரை
மூன்னோடும் இப்பயணம்.

ஓட்டத்தின் களைப்பில் சாய்ந்திடும் மடியாய்
இருவரும் தாங்கிக் கொள்வோம்
நம் காதலின் கடினம்
கடவுளையும் கரைத்திடுமெனில்
கரை கொள்வோம் நூறாண்டு காலம்.

Monday, 23 October 2017

மெய்யன்பு

நடு ஜாமத்தில் திரிந்திடும்
தனிமை தென்றலே
என் காதலின் வலி கேட்பாயா?

மற்றொரு தருணம் அறிந்திடாத பொழுது
உடனிருப்பதாய் சத்தியம் செய்தவள்
கண்டங்கள் கடந்த பின்னும்
எனக்காக விழித்திருந்தவள்
இன்று கேட்கிறாள்
என் காதலின் மெய்நிலை கணக்கு.

பாதையில் ஐயமெனில்
சேரும் வழி பிணக்கு
கனவினில் ஐயமெனில்
விழியினில் தூக்கம் குறுக்கு
அவளுக்கு என் காதலே ஐயமெனில்
இன்னும் இவ்வுயிர் எதற்கு?

அவளை தேடி வந்ததும்
என் காதல்
தாய்மையாய் நெஞ்சினில் சுமப்பதும்
என் காதல்
தழுவாது பிரிந்து புன்னகையிழந்து நிற்பதும்
என் காதலே

என்னை வினவும் முன்
ஒரு கணம் கூர்யிட்டு கிழித்திருக்கலாம்
மனம் தவித்திடுமுன்
உடல் மரித்திருக்கும்

போதும் தென்றலே
உடல் சார்ந்த வலியும்
சுடும் தீ தனிமையும்
ரணம் கிழிக்கும் கேள்விகளும்
என்னுடனே மறைந்திடட்டும்
உறங்கும் விழிகளும்
உள்ளத்து அமைதியும்
என் காதலிக்கு உரித்தாகட்டும்!

Monday, 18 September 2017

குளிரே பதில் கூறடி

உன்னை பிரிந்த துயரமும் சோர்வும்
எம்மை தீயின் நா கொண்டு தீண்டியதடி
என்னை மட்டும் கூராய் சுட்டிடும் காதல்
உனக்குள் தொற்றிட வில்லையா?
தீயினில் காய்வது எம் குணம்
குளிரினில் ஒய்வது
எம் துணைவி குணம்.

குளிரின் குறிப்பு குறையில் கொள்ளும்
உன்னுள் இறங்கிடா உணர்வாய்
உன்னோடு கழிந்திடாத வாழ்வாய்
உன் அறிவொளி அறியா கழையாய்
நம் காதலின் குறையாய்
என்றும் எனை நிரப்பிக் கொள்கிறேன்.

குளிரின் தன்மை பற்றிக்கொள்ள
எந்நாள் தன்னை எரித்திட வேண்டும் தீ?
எரியும் பொருள் ஏங்கிக்கொள்ள
உறை நிலையாய் உறங்க செல்வாயா
அல்லாது உன் நிலை உன்னதமென
இக்கரித்துகளை கறைய சொல்வாயா?
தனிமை தீயிற்கு குளிரின் வைப்பென்னவோ


Tuesday, 5 September 2017

வெள்ளி மயில்

தனிமை தான் எத்தனை ரணம்
நம் உறவிற்கு அத்துணை பலம்
நேற்றைய வலியினை
இன்றைய கனிவோடு சொல்ல துடிக்கிறேன்
காலமில்லை உன்னிடம்

மறையற்ற மனம்
என்னிடம் திண்ணம்
உன்னை மணம் கொள்வதே
அதன் எண்ணம்

எம் மனமும் கவியும்
உன்னிடம் திறந்தே இருக்கும்
அறியா புதினம் நம்மிடயே இருப்பின்
அது உன் மனம் பொருந்தா இடமாக இருக்கும்
பல்லறிவு கொண்டவள் பற்றிகொள்ள
எம் மொழி பற்றவில்லையோ தோழி ?!

எத்தனை திங்களாய் காக்க வேண்டும்
செவ்வாயில் இதழ் கோர்த்து முத்தம் பொருத்திட
கமையிழந்த சுக்கிரனாய் உக்கிரனாய்
வெள்ளி மயில் காதோடு
காதலை சொல்வேன் ஓர் நாள்
அக்காலம் கூடுமடி என் துணைவி
அப்பொழுது வரை காத்திருக்கிறேன்

Thursday, 3 August 2017

வலியில் வழி வைத்து

வாழும் வரை நீயடி
நம்மை வாழ்த்த வழி சொல்லடி
இருப்பில் கால்கள் வைய்யடி
நீ இல்லா கனவுகள் ஏதடி?
ஈடன் தோட்டத்து மலரும் நீயடி
நம் வனத்திற்கு கண்ணீர் பூக்கள் ஏனடி?
என் கதவுகள் மூடிக்கொள்வதினால்
காதல் மொழியின்றி தவிக்கறேனடி
ஆயிரம் விளக்குகள் எரிந்தென்ன லாபம்
வழியறியா விழிகளுக்கு
ஒளி வெள்ளம் எதற்கடி?
என்னோடு வருகையில்
முள்ளாய் வார்த்தை கொட்டுமடி
நம் உறவே நிலைக்காதென
உலகம் சிரிக்குமடி
வசந்தமற்ற வனத்தின் தேனீ(நீ)யே
உனக்கான பூங்காவனம்
தனியே உள்ளதடி
யாரும் பார்க்காத கவிஞன் நான்
ஊரே மெச்சும் கவிதை நீ
உன்னை படிக்கும் கண்களோ கோடி
நீ செல்லும் பாதையும் தூரமடி
இத்தனை கண்ணீரும் உனக்கெதற்கடி
செல்லமே!!


Sunday, 30 July 2017

உயிரெழுத்து

அன்பிற்குரிய காதலி
ஆசையில் ஒரு முறை அணைப்பாயா
இதயம் முழுதும் நீயடி
ஈர் உடல் ஓர் உயிர் நாமடி
உயிரில் கலந்த எரிமலை தீயே
ஊரறிய மணமுடிப்பதெங்கே?
எங்கு காணினும் கனவாய் உன் முகம்
ஏங்கும் மனதிற்கு ஆறுதல் எங்கனம்?
ஐயம் பயக்கும் பிரிவினை ஆயிரம்
ஒரு முறை தீர்வாய் ஆழ்ந்த முத்தம்
ஓர்மை கொள்ளும் இருமை விலகிடும்
ஔவை வயதிலும் (நம்) நேசம் நிலைத்திடும்
இ ஃ து உறுதிமொழி அல்ல உயிரெழுத்து.

Thursday, 27 July 2017

காதல் உறவே

உன்னோடு இதழ் கொண்டு
பேசா காதல் தனை
ஏதோ ஓர் மௌனமான பொழுதினில் காற்று கரை சேர்த்திடுமா

தீரா காதல் நீயல்லவா
பிரிந்திடா சொந்தம் நமதல்லவா
காதல் கூடிடும் திருநாளும் வருமா
தனிமை என்னை வாட்டுதடி
என் ப்ரியமான டெட்டி