Saturday 28 October 2017

துடிப்பு

சிந்தைக் காட்டினில் மலர்ந்த மல்லிகை
மாலையில் மூடிடுமா?
கனவினில் உன்னை களவுகொடுத்தேன்
என் உறக்கம் தான் திரும்பிடுமா?

பாற்கடலினுள் ஆழ்ந்திருக்கும் முத்துச்சிப்பியே
முத்தம் பொழிந்து என்னுள் அடங்கு
காதலோடு அணைத்து கட்டிலில் கிடத்தி
மறுநாள் இம்சைகள் தொடங்கு.

காய்ந்த கண்ணீரிக்கு வினையான வெண்காயமே
உன் தினசரி வினாவிற்கு பதில்கேளடி
நாம் இணைவது உறுதியெனில்
என் இத்தனை கண்ணீர், அத்துணை துடிப்பு?

துணைவியே திருமணம் நம் இலக்கல்ல
வாழ்க்கைப் பயணம்!
குருதி ஓடி உயிர் வாழ்ந்திட
இதயம் துடித்தாக வேண்டும்
இன்றைய தேன் கிடைத்ததென
நாளை தேனீ நின்றிடுமா?

ஓட்டத்தின் ஒரு பகுதி விளக்கு
இன்று உன் கையினில் கொடுத்தேன்
காவிரி கரை கொண்டால் திருச்சி
காதலிற்கு தேவை உன் எழுச்சி
குழல் கூடி காற்றினை இசைத்திடுமா
மனதால் நம் கூடல் இசைந்திடுமா?

இந்த ஓட்டம் நாம் கொண்ட காதலானது
உனக்காய் வடிக்கும் கவிதையானது
மூப்பும் முதிர்வும் கொள்ளும் வரை
மூன்னோடும் இப்பயணம்.

ஓட்டத்தின் களைப்பில் சாய்ந்திடும் மடியாய்
இருவரும் தாங்கிக் கொள்வோம்
நம் காதலின் கடினம்
கடவுளையும் கரைத்திடுமெனில்
கரை கொள்வோம் நூறாண்டு காலம்.

Tuesday 24 October 2017

மெய்யன்பு

நடு ஜாமத்தில் திரிந்திடும்
தனிமை தென்றலே
என் காதலின் வலி கேட்பாயா?

மற்றொரு தருணம் அறிந்திடாத பொழுது
உடனிருப்பதாய் சத்தியம் செய்தவள்
கண்டங்கள் கடந்த பின்னும்
எனக்காக விழித்திருந்தவள்
இன்று கேட்கிறாள்
என் காதலின் மெய்நிலை கணக்கு.

பாதையில் ஐயமெனில்
சேரும் வழி பிணக்கு
கனவினில் ஐயமெனில்
விழியினில் தூக்கம் குறுக்கு
அவளுக்கு என் காதலே ஐயமெனில்
இன்னும் இவ்வுயிர் எதற்கு?

அவளை தேடி வந்ததும்
என் காதல்
தாய்மையாய் நெஞ்சினில் சுமப்பதும்
என் காதல்
தழுவாது பிரிந்து புன்னகையிழந்து நிற்பதும்
என் காதலே

என்னை வினவும் முன்
ஒரு கணம் கூர்யிட்டு கிழித்திருக்கலாம்
மனம் தவித்திடுமுன்
உடல் மரித்திருக்கும்

போதும் தென்றலே
உடல் சார்ந்த வலியும்
சுடும் தீ தனிமையும்
ரணம் கிழிக்கும் கேள்விகளும்
என்னுடனே மறைந்திடட்டும்
உறங்கும் விழிகளும்
உள்ளத்து அமைதியும்
என் காதலிக்கு உரித்தாகட்டும்!