Sunday, 25 June 2017

துணைவி

தீது அறியா சிறியவள்
பிறந்த மழலை நகையுடை இனியவள்
காத்திருக்கா மனமே
இனியெல்லாம் அவள்.

யாரும் அருகா எரிமலை சிகரமவள்
எனக்காய் மட்டும் நிலவாய் குளிர்பவள்
இதயத்தில் தலை சாய்த்து
இமை கொண்டு
காதல் கணை தொடுப்பவள்
இருள் சூழ்ந்த மனதிற்கு
இல்லற தீபமாய் ஒளிர்பவள்.

கவிதையின் மறு வரியாய்
உயிரின் மறு பாதியாய்
அவளது நினைவுகள் இங்கே!!
மண முடித்த நன்நாளில்
சுடும் பகலை வீட்டிற்கு அனுப்பி
அவள் புடவை தலைப்பினில்
உறங்கிடும் மாலையும் எங்கே??
இங்கனம்
அவ்விரவு விடிய காத்திருக்கும்
வருங்கால கணவன்

Monday, 12 June 2017

அவளதிகாரம்-2

சிறகு முளைத்த
சிறு பறவை நான்
புயல் காற்றில் புலம் பெயர
கூட்டை தேடி அலைகிறேன்
உந்தன் மடியில் இடம் கிடைக்குமா?

பிறந்த பொழுது
அழுததாய் நினைவில்லை
உன்னை பிரியும்
ஒவ்வொரு கணமும் அழுகிறேன்

அத்தனை கவிதைகளும்
உன்னை சேரும் முன்
கண்ணீரால் நனைந்திருப்பதை அறிவாயா?
அன்பே அருகே வருவாயா
எந்தன் வாழ்க்கை பிழைதனை அழிப்பாயா

விண்ணும் மண்ணும்
மழையால் சேர்வது போல்
உன் ஈர முத்தம்
நம்மை சேர்ப்பது எப்போது?

நீ இருக்கும் இடத்தில்
தன்னிரக்கமும் இல்லை தாழ்வும் இல்லை
உனக்காய் விழித்திருப்பதாய்
சினமும் தேவையில்லை செல்லமே
எனக்காய் அத்தனை சுமைகளையும்
சுமக்க போகிறவள் நீயடி
என் ராணியின் மலரடிகளை
இந்த மனதில் வைத்து தாங்கிடுவேன்.

நெருப்பினை பற்றும் தீக்கஞ்சியாய்
நம் இருவரையும் பிணைத்து
குளிர் காய்கிறது காதல்.


தீக்கஞ்சி- Camphor

Sunday, 11 June 2017

மனைவிக்கு ஓர் மடல்-2

டிசம்பர் நான்காம் திகதி
பத்து மணியளவில்
பதிணென் மல்லிகை சரத்தில்
நட்டுவைத்த ஒற்றை ரோஜாவென
பிறை சூடிய கங்காதரன் மடியில்
பாய்தோடும் அழகிய கங்கையென
என் தேவதை பிறந்தாள்

காட்டு ரோஜாவை தேடிக் கொள்ளும்
கருவண்ண தேனீயாய் சுற்றி வந்து
அவள் மனதினை கவர்ந்தேன்

சூறை காற்றில் தோற்றிடும்
மலர் மொட்டுகளை போல்
பூங்கொற்றில் சிரித்திடும் ஒற்றை மலர்
அவள் பால் மனம் சாய்ந்ததே

இருளடைந்த வான் நான்
முழு நிலவே எனை விலகி செல்லாதே
யார் முகம் நோக்கினும்
உன்னோடு மட்டுமே பேச தெரிந்த
மழலை நான்
மற்றோர் முகம் காண சொல்லி
தீவாய் பிரித்து காட்றாற்றில் விடாதே
எங்கேயோ உடைந்து போகும் இப்படகு

பிரிய சகியே
உன் மேல் எத்தனை காதல் தெரியுமா
அயர்ந்த விழிகள் உனக்காய் மட்டும்
விழித்திருந்து கனா காணும்
இதழ்கள் உனக்காய் மட்டும்
முத்தம் பொழியும்
இதயம் உனக்காய் மட்டும்
வாசல் திறக்கும்
மற்றோர் பாதை கூட செல்லாது
என் மனதை நீயே சிறை வைத்திருக்கிறாய்

மீண்டும் ஓர் முறை
எத்தகைய காதல் என வினவாதே
என்னை படைத்தவன் கூட
கூற இயலாது கவிதைகளில் மூழ்குவான்.

Friday, 9 June 2017

மனைவிக்கு ஓர் மடல்

தொடு திரை வழியே
      கூர்  தீட்டி
இதயம் பிளந்து
 கூடும்  காதல் நமது

இன்று பெண் பார்த்து
இரண்டு நாள் கழித்து கடிதம் போட்டு
வாய்த்த பொருத்தம் நமதில்லை

உன் கண்கள் மூடி
மெழுகின் ஒளியில்
பூக்கள் வீசிடும் கணவனில்லை

கை சுட்டு நீ செய்த
ஆசை சமையலின் ருசி பார்த்து
உச்சி முகரும் கணவனில்லை

இன்னது உனக்கு பிடித்தவை
இங்கே இவள் புன்னகை
இதோ இவளது கனவுகளென
தேடி கோர்க்கும் கணவனில்லை

உலகின் இறுதி அழகி நீயென
அங்கராகம் அற்ற அழகு விசையினை
வர்ணித்து வடிக்கும் கவிஞனும் நானில்லை

உன் காதலுக்கென
தகுதிகள் இல்லாவிடினும்
ஏனடி என் மேல்
இத்தனை காதல் உனக்கு

என் கவிதைகள்
நீ சூட பிறந்த மலர் மாலைகள்
என்னை செதுக்கும் சிலைக்கு
உடைந்த சிற்பியின் வரிகள்
நாளை நீ எதிர்நோக்கும் கணவனாக
இன்று மாற துடிக்கும்
காதலனின் அன்பு மடல்


Wednesday, 7 June 2017

என் இனிய ஹைக்கூ

புடவை தலைப்பினில்
என்னை சிறையிட்ட அழகியே
உன் விழியில் விழுகையில்
ஆயிரம் வெட்கம் வருகிறதே
ஆசை கவி வரைகிறதே

விடிந்த பின்னும்
விலகாத கனவே
உன் தீயில் பற்றிக்கொள்ளும்
காதல் கடிதம் நான்
எரிந்த காகிதத் துகளும்
உன் அணைப்பில் வைரமாகுதே

உலகின் ஓரம் சாய்ந்து
என்னை இசைத்திடும் புல்லாங்குழலே
தீ பிடித்த காட்டினில்
பனி துளி உறங்கிடுமா
கணவா என அழைத்திடும் பொழுதிற்கு
காதல் பொறுத்திடுமா?

காவியங்கள் தோற்றிடும் வடிவே
என் இனிய ஹைக்கூவே
திருமண விரலில்
எப்பொழுது
மோதிரம் கோர்க்க காண்போம்