Tuesday 28 February 2017

அவளதிகாரம்

ஒரு கை மௌனத்தில் ஆழ்ந்திருந்தேன்
இரு கரம் கொண்டு அழைத்து வந்தாள்
நிலவின் நிழலி தோற்கும்
கார்மேக குழலி ஒருத்தி

காவினில் சேர்ந்திழைத்த மாலையென
பாக்களை கோர்த்து
அவளுக்கென்று வடித்தேன்
என் வரிகள் அவளிடத்து அர்ப்பணம்.

மழை என்று சொன்னால்
பச்சிளம் கொண்டு வருவாள்
மழை தொட்ட மனதை
நான் வருடக் கூடாதா?

காகித ஓடம் கொண்டு
கண்டங்கள் கடக்க முயல்கிறேன்
வண்ணத்துப்பூச்சி இறகு கொண்டு
விண்மீன் தழுவப் பார்க்கிறேன்
ஓசை ஓதும் குழல் கொண்டு
குடிநீர் அருந்த தோற்கிறேன்.

குளிர் கொண்ட விட்டில் மனம்
வேண்டி தெரிவது ஆகிடத் தீ
தழலென தெரிந்தும்
விழுந்து மாயும் விரும்பி
நெருப்பினில் எரிகையிலும்
கொண்ட காதலில் என்றும் விலகா!

உன் தீயில் கரைகிற விறகாயினும்
என் நினைவழிந்து நிழலாகினும்
ரசம் தொலைந்த ஆடியாயினும்
வீழ்ந்து சிதறுவேன்
ஒவ்வொரு சில்லிலும்
உன் முகம் காண்டிட.

Tuesday 14 February 2017

திரும்பி வா சகியே

காழ் மனம் கொண்டவள் உன்னை
கண்ணீரில் அரியும் முன்
களூரிற்கு பறந்தாயடி கண்ணம்மா
காலத்தில் ஓர் தடம் பதிய வேண்டும்
திரும்பி வா சகியே

உன் மனா தெரிகையில்
என் மனம் கவர்ந்தாய்
இருள் மறை பூனையாய்
தேடி உன்னை தொலைக்கிறேன்
திரும்பி வா சகியே

வாட்ஸ்பில் சண்டையிட்டு
ஸ்மைலியாய் மறையும் என் நிலவே
கோளோடு யுத்தம் கொண்டு
கிரகணமாய் மறையாதே
முழு இரவும் நமக்கென விழித்திருக்கும்
திரும்பி வா சகியே

உன்னோடு கழித்த பொழுதினில்
என்னை நான் மீட்டெடுத்தேன்
இதயத்தின் காயம் வழியே
குருதியாய் வழிந்தோடினாய்
காயங்கள் ஆறுமுன்
கானலாய் கரையாதே
திரும்பி வா சகியே

எத்தனை வர்ணனை தீர்த்த பின்னும்
துளிர்க்கும் காதலாய்
வடிக்கும் வரிகள் உனக்கெனவே பிறக்கிறது
என் வாசகியே