Monday, 22 May 2017

என் அருமை காதலி-2

அவசரம் அவசரம்
அத்தனைக்கும் அவசரம்
இக்கணம் முதல் நிதானமாய்
காதல் பயின்றிட அவசரம்
கடல் கடந்து காலம் மறந்து
கட்டியணைத்திட அவசரம்
நான்கு கண்கள் கலந்து
ஒற்றை காட்சி காண்டிட அவசரம்
சுருள் முடி கொண்டாள்
தலை கலைத்திட அவசரம்
பிறை நிலா நெற்றியில்
முத்தம் பதித்திட அவசரம்
உன் ஆசை தீ எனக்காய்
ஒளிர்ந்திட அவசரம்
யாருமற்ற காட்டினில்
நம் பெயர் உரைக்க அவசரம்

உனக்கான காதலை
பதிந்திட அவசரம்
நம் காதல் கவிதைகளை
நீ எழுதிட அவசரம்
நீ எனக்கானவள் என
சுற்றம் அறிந்திட அவசரம்
நம் மணமுடிப்பதை
நட்பிற்கு சொல்லிட அவசரம்
வானூர்தியில் இறங்கிய கணம்
வாழ்க்கை வாழ்ந்திட அவசரம்
நாம் நச்சயித்த நொடியில்
பெற்றோர் கண்கள் பணிந்திட அவசரம்
இவர்கள் மணமக்கள் என
அழைப்பிதழ் பதிந்திட அவசரம்

திருமண பொழுதினில்
உன் விழி நீரை துடைத்திட அவசரம்
காலம் முழுதும் கரம் பிடிப்பேன் என
தீபம் முன் உறுதிட அவசரம்
நம் திருமண வாழ்க்கை தனை
தேவர்கள் வாழ்த்திட அவசரம்
கட்டிலில் ஆடை களைந்து
பிறந்த மழலைகளாய் முத்தமிட அவசரம்
தாயான உனை
மடியில் தாங்கிடும் அவசரம்
என்னையும் சேர்த்து
மூன்று பிள்ளைகள் பெற்றிட அவசரம்
முப்பது ஆண்டுகள் கடந்த பின்னும்
காதல் கவிதை எழுதிட அவசரம்

என் வேகம் தனை தனித்து
நிதானம் அருள்வாயா
என் அருமை காதலி?

Saturday, 20 May 2017

என் அருமை காதலி

தனியே இருக்கும் ஒற்றை தோணி
காதல் கொண்டால்
கரையினை கடக்கும்
கண்கள் உன் மேல் மையல் கொண்டால்
கலங்கும் நெஞ்சமும்
கவிதை கொள்ளும்.

சிறகு விரிந்த என்
கவிதை மழலைகள்
உன் மடி தேடி
தஞ்சம் கொள்கிறது.

களவாடிய கனவுகளை புன்னகையுடன் நிரப்பி தா
இங்கே உறக்கம் இன்றி தவிக்கிறேன்
நிஜமென்று எண்ணி கண்ணுறங்க சென்றால்
அனைத்தும் கனவென இருள் களவாடி கொண்டால் என் செய்வேன்?

கணிணியில் முகம் கண்டால்
வரிகள் வற்றிவிடுமாம்
அயிரமாயிரம் கவிதை பேசும் விழிகளுக்கு
வார்த்தைகள் ஏதற்கடி?

உன் தோள் கொண்டு அணைக்கவில்லை
உன் தலை சாய்த்து இதயம் துடிப்பதில்லை
உன் கண்ணீர் தனை கரம் கொண்டு
எந்திடவில்லை
(எம்)இமை கொண்டு உன் விழி கோதிடவில்லை
கனவுகள் கிழித்து கலவி புரிந்திடவில்லை
இத்தனையும் இல்லாது
எம் காதலை பொறுப்பாயா
என் அருமை காதலி?

Friday, 5 May 2017

திரும்பி வா சகியே -2

ஆழி சூழ் உலகில்
ஆற்றின் துருவந்தனில் பிறந்த நம்மை
இன்று ஆழ்கடல் பிரிக்கிறது
காலத்தின் சுவரிடையே
வார்த்தை பாலம் கொண்டு வாழ்ந்தோம்
தவறிய வரிகளில்
துணை இழந்து தவிக்கிறேன் (நான்)

என் மீது சினமில்லை என கூறும்
புன்னகை துறந்த இதழ்கள்
"என்னிடம் எதுமில்லை பகிர" என முடித்து
எம்மை பிரிக்க துடிக்கும் மௌனம்
தனிமை சாலையில்
உன் துணையின்றி பிழையாய் திரிகிறேன்

உன் வார்த்தைகளை செவிகொண்டு
கேட்பதில்லை என்பது உன் குறை
உயிர் கேட்கும் ஓசை தனை
செவிகொண்டு நிறுத்துவதில்லை தோழி
நீ கதைக்கும் பொழுதினில்
இதயம் சிறகு விரிக்கும் அறிவாயா?

"நான் இன்றி போனால்
என் உடல் கரைந்தால்
காற்றோடு கலந்திட்டால் என் செய்வாய்"
என பழிக்காதே தோழி
மறந்தாலும் மறுத்தாலும்
நீ என்ற உண்மை தான் அழியுமா?
இந்த கவிதையின் ஓர்மை தான் தீருமா?
காலனென்ற பிரிவினை எதிர்கொள்ளும் வரை
என்றும் உன்னோடு இருப்பேன் தோழி

இவையனைத்தும் எம் கற்பனையென
நீ முடிக்க கூடும்
கவிஞன் என்னோடியிருப்பது
உன்னோடு கழித்த உண்மையான பொழுதுகள்
என் நிஜம் நீ
நெடுங்தொலைவு சூழ்கொண்டால்
உன் நினைவுகள் தானே என் புகலிடம்.

காட்டு தீயில் கரைந்திடா விறகா
பறவை பறந்திட மறுத்திடும் சிறகா
நட்பினுள் உன் கொடை அதிகா
மனிதருள் உன் குணம் அநகா
நீயின்றி மனம் தீகா
சொல்லின்றி மொழி பிறக்கா
சொல்லடி நீ கார்குழலி