Monday 26 February 2018

பிப்ரவரி 25

ஏதோ ஒரு பாடலும்
நம் புகைப்படமும்
இங்கே வீசி செல்ல எண்ணம்
ஆனால் என்னை முழுதாய் கொண்டு
மூச்சிரைத்த நாளை
இன்னொரு நினைவில் படைப்பதாய் எண்ணமில்லை.

மீண்டும் ஒரு முறை அல்ல
இறுதி முறையாய் - அந்த காதல் பார்வையை
பார்த்துவிட்டு பறந்திட வந்தேன்
உன்னை மணப்பெண் ஆக்கிட
வீட்டில் நடப்பதை அறிவேன்.

செங்கோடு கருப்பு வெள்ளையில் நின்றிருக்க
அங்கே நீல வானின் தேவதை இறங்கி வந்தாள்
உன் எண்ணம் உடை தேர்வில் இருக்க
நான் உன் உரியவனென தெரிவாக துடித்தேன்.

அந்த சாலை ஓர கடைகள் அலைந்தோம்
உன் கைகள் பற்றிடும் தொலைவு வரை நடந்தேன்
வழியில் என்ன கடந்தேன் தெரியவில்லை.

அத்தனை கோடை உன் மேல் பாய்ந்திட
புது மலரென நீ சிரிக்க
உன்னை பார்த்து கொண்டே யாவும் மறந்தேன் நான்
நீ சிரிக்கும் பொழுதினில்
இதயம் உறைந்திருக்க
தாமிய கணம் தீண்டிய சிகையில்
மீண்டும் மீண்டும்
காதலாகி விழுந்தேன் நான்.

இத்தனை நாள் முயன்றும்
எந்த காதலும் பொருந்தவில்லை
கருடன் இட்ட மாலையென
அறிதாய் ஓர் இதயம் திறந்தேன்
உன்னை அன்றி வேற்றோர் பெண்ணை விரும்பவில்லை.

இன்று நீயும் நானும் காதல் பேச
மத்தியில் அமர்ந்து தோள் சாய
என்னிடம் அருகாமை இல்லை
நீ என் மொழி
உன்னிடம் கவிதை கொள்ள வருவேன்
இன்னும் பல தனிமை கடந்து
என்னோடு நீ இருப்பாய் காத்திருப்பேன்.

Wednesday 21 February 2018

கனவே கலைந்திடு

இறந்து போன நினைவொன்று
கலைத்து செல்கிறது உறக்கத்தை
காத்திருந்தேன்
கரம் பற்றினேன்
கண்ணீர் சிந்தினேன்
எதற்கும் உன்னிடம் கண்ணில்லை
உயிரே உனக்கு பார்வையாய் இருந்தேன்
கண்கள் மூடி
கொன்று புதைத்தாய் என்னை.

நீ வீசி சென்ற அன்று
கூந்தல் சூடாது கசங்கிய மாலை
தெருவோரம் சரிந்து கிடந்த
சிரிக்கும் புத்தர் சிலை.

என்னுள் இக்கணம்
பெயராக புலனாக
நீயாக நிஜமாக ஏதுமில்லை
தீ வைத்த சிதையின்
தழும்பாக மட்டுமே இருக்கிறாய்
காலம் கடந்த நினைவே
கடிகார முள்ளாய் பிரிந்திடு.

இன்று காதலிக்கிறேன்
மாலையிட்டு மையலாய்
கொள்ளை கொண்டவளை
நீ மறுத்த அத்தனை அன்பையும்
அவளிடத்தில் கொட்டுகிறேன்
என் மனவெளியில்.

தீக்கனா எனை தொடுத்தால்
பிகமென பாடி வருடுவாள்
காதலி அவளும் அருகிலில்லை
என் காயங்கள்
அவள் மருந்திட ஆறும்
ஆனால்
என்னை எரித்திடும் அனலே
காற்றோடு அணைந்திடு
நாளை நான் மறைந்தாலும்
அவளை காதலித்தவனாய் தான்
நிலைத்திருப்பேன்.

Monday 19 February 2018

நினைவுப் பேழை

காதலில் தான் எத்தனை நினைவுகள்
முதல் நாள் உடை என்ன?
இன்று காதலில் என்ன நிகழ்ந்தது?
எப்பொழுது ஊடல் கொண்டோம்?
அத்துணை நினைவுகளும்
காதலரோடு அழிகிறது
கணிணி போன்றே காதலும் மாறுகிறது.

முந்தைய காதல்-
பழகு, காதலி, கரம் கோர்த்து கொள்
மணம் செய், நிலவிற்கு செல்
கலவி கொள், குழந்தை பெற்றிடு
பணம் சேர், பெற்றதை கரை சேர்
மாழை இழந்து ஓர் நாள் மடிந்திடு.

துணை கொண்டவள் காதலை
முகநூல் முத்தத்தோடு நிறுத்திடு
நான்கு லைக் வாங்கி
நாலு கோடி பேரில் கலந்திடு.

பிந்தைய காதல்-
பார், பிடித்திடு
மறைவாய் முத்தமிடு
கலைத்திடு பின் கலைந்து விடு
முறித்து முகநூல் பதிவிடு
கொஞ்ச நாளில் வேற்று பெண்ணிற்கு மாறிடு.

ஆண்டுகள் கடந்தும்
உறங்கும் காதல்-தாஜ்மஹால்
பிரிந்து வாழும் காதல்- சலீம் அனார்க்கலி
பிரிவிலும் சேர்ந்த காதல்-நள தமயந்தி
நாம் கொண்ட காதலும் சிறிதில்லை
கல்வெட்டில் பதிந்திட சோழனில்லை
காலத்தில் நிறுத்திட கம்பனில்லை

என்னை உருமாற்றி
நீ உருகிய காதலை
நின்று முத்தமிட்டு
நூறு பாடல் பூச்சூட வேண்டும் என் அமராவதிக்கு.

உன்னை பிரிந்து வாழும் ஒவ்வொரு நொடியும்
சிரம் போன்று ஒற்றையாய் வலிக்கிறது இதயம்
இந்த காதலும் அன்பும்
வாழ்வின் நீரோடையில் மறையாது
அகவை கடந்த பின்னும்
ஓர் மாலை நேரத்து மையல் தருணம்
தீ பிங்கமென காதலி முகம் ஒளிர
அவளிற்காய் வரைகிறேன்
அருமன் தேன் துளிகளை.

கவிதையின் பின்குறிப்பு:
நான் உன்னை காதலிக்கிறேன்

Tuesday 13 February 2018

தலையணை

தனிமையில் நான் உன்னை சீண்டினால்
செல்லமாய் எனை தாக்கும் ஆயுதம்
எனை தழுவிய பொழுதெல்லாம்
உந்தன் கூந்தல் சேர்க்கும் பேழை
தனியே தவிக்கும் நள்ளிரவில்
கண்ணீரின் ஈரம் தாங்கும் நுதிக்கை
இரை தேடும் தனி பறவையாய்
ஊர் எங்கும் திரிந்துவிட்டு
இரவில் உன் நினைவை இசைக்கும்
என் பிரிய வானொலி -தலையணை

கனவில் நீ தந்த முத்தங்களை எல்லாம்
தலையணை உறையில் சேர்பித்து
நினைவில் கொஞ்சும் கவிதையாய் வடிக்கிறேன்
நிலவின் மடியில் வெண்மேகமாய்
உள்ளம் முழுதும் தீயே பரவுகிறாய்
வஞ்சி என்னுள் உறங்கடி
சோம்பல் முறித்து அழகாய் தூங்குகையில்
நீ கேட்டிறாத பல கவிதைகள்
என் தலையணையுள் அடக்கம்
கொஞ்சம் அதனிடம் கேளடி

இலவம் பஞ்சினை இறுகி அணைக்கும் திண்டுறையென
நெஞ்சறையில் உன்னை சுமக்கிறேன்
பிரிந்திருக்கும் காதலர் தம்மை
கருப்பு வெள்ளை புகைப்படம் போல்
பிணைத்திருக்கும் விந்தை
தலையணையில் பிறக்கும் காதல் சிந்தை

என்னை தினமும் உறங்க சொல்லும்
உன் உதடுகளுக்கு சொல்
உன் மடியிற் சிறந்த தலையணை
இன்னும் பிறக்கவில்லை.

Friday 9 February 2018

காதலடி உன் மேல்

இன்று காதல் அறிவி தினம்
பெண்ணருவி உன்னில் தான் எத்தனை நீரடி
அதனுள் முழ்கிட காத்திருக்கிறேன்
-கடற் தாண்டி
ஒடையில் வழிந்தோடும் தாமரை இலையென
உன் நீரில் என்னை தவழ்ந்திடடி கண்மணி
அகன்ற வாய்காலில் மீன்கள் துள்ளிடும்
உன் விண்மீன் விழியில்
என் வாழ்க்கை துளிர்விடும்

கண்கள் தூரம் கடந்து
கனவுகளில் விழித்திருக்கிறேன்
அழகிய நினைவுகளின் கூடை சுமந்து
மயிலிறகால் கீச்சங் கீதாஞ்சலி இசைத்து
மீத முத்தம் முடியும் முன்
கண்ணுறங்க செல்கிறாய்
தொடர்பற்ற பொழுதினில்
இதழ் பற்றாது தொலைகிறேன் என்னை தேடடி

காதல் சின்னங்கள் தன் பால்
இதயம் மொழிவதில்லை
பார்வையற்ற வீணை மீட்க
இசையின் தாகம் வேண்டிடுமா?

இந்நாளில் உன் முகம் தாங்கி
மலர் கொற்றையில் கன்னம் தழுவி
தீ பிழம்பின் காலடியில்
உறங்கிடும் பனித்துளியென
உன் மடியில் உலகம் மறந்திட வேண்டும்
மழலைகள் பல கொண்ட பின்னும்
உனக்கென கவிதைகள் வரைந்திட வேண்டும்
என்னோடு காதலில் கூடடி
முழுமை நீயென வாழ்ந்திட வேண்டும்