Sunday 19 December 2021

கவிதையின் காதலன்

கைகளில் அடங்கும் நவயுகத்தில்
அனைத்தும் சலித்துவிடும்.
காதலா, அலைபேசு
கோபமா, டிவிட்டரில் கீச்சு
என்னும் கோபமா,
முகத்தோடு எதிர்கொள்ள வேண்டாம்
முகநூலில் தடை செய்தால் போதும்.

இரசனைகள் மாறுகையில்
உணர்வுகளுக்கும் இனி பஞ்சமோ?
முதல் ஸ்பரிசமும் முத்தமும்
காணொளியில் களித்து
சமுக இடவெளியென
மனமுறிவை பெருக்கி
எதனை நின்று இரசிக்க மறந்தோம்?

துரித உணவு காலமிது
கலவியை கடந்ததோர் படுக்கையில்
ஒரு கண் ஆர்வத்தால்
இன்துணை மேல் வைத்துறங்கும்
அன்றிலின் காதல்
தலைமுறை கண்ட பழமையோ?

கணிணியில் மின்னஞ்சல் செய்தால்
உணர்ச்சிகளின் கலவையினை
தேவைக்கேற்ப
இயந்திர ஊக்கிகள் கடத்துமோ?
கவிஞர்கள் தொல்லை இல்லை
எதுகை மோனையோடு
நிரல்களே தேம்பாவணி பாடும்.
இல்லத்தில் இருவரும்
தத்தமது மடியில்
இல்லாளை விடுத்து
செல்போனை கொஞ்சவோமோ?

உன் முடியினில் விளையாடும் கூடல்
காதலை பின்னோக்கி தீற்றினாலென்ன?
நான் ஏட்டிலிட்ட பழங்கதையாகவே
ஏந்தி கோதிட வேண்டுகிறேன்.

எண்ணை தோய்த்த முகத்தினில்
எளிதாய் தெளிவுரும் சருமம்
என் கற்பனைகள்  பொலிவுற
உன் நினைவினில்
சலவை செய்தால் போதாதா?

இவ்வாழ்க்கை உனை
ஆரதிக்காமல் போகுமாயின்
எம் தேகம் எரித்த கரித்துகளை
பென்சிலாக வடித்து
உனை வரையவே வேண்டுவேன்.

இவ்வசர யுகத்தின் கல்வெட்டுகளில்
தனிப்பெரும் காதலனாக
வாழ்ந்திருப்பேன் போதுமெனக்கு.

Saturday 18 December 2021

தலைவியின் அருமையில்

கனவின் நுழைவாயிலில்
அருகருகே படுத்திருக்கிறோம்.
கைகள் இரண்டும் தீண்டிக் கொண்டே
ஒருவரில் ஒருவரர் கலந்திருப்போம்.

உள்ளம் கொண்ட வேட்கையோ
உடல் கொண்ட தடுப்பூசியோ
தேகம் முழுதும் சுடுகிறது.
தீபிகாவின் அருகாமையில்,
பற்றியெறிவது இயற்கையன்றோ!
என் பாதம் இரண்டும்
வலி கொண்ட பின்னே
அதனை ஏந்தியது-
உந்தன் கரங்களன்றோ

நம் உடலில் புத்துயிர் சேர்ப்பது இப்பேரன்பு அன்றோ
நாற்காலமும் மறந்து,
காதலென பிணைந்து, தீவொன்றில்
நாம் இருவரும் வாழ்வோம் வா.

என் வரிகள்
உன்னை கண்டால்
நெளிகிறது வெட்கத்தில்.
இதழ் கோர்த்து நீ படிக்கையில்
வார்த்தைகளும் புது இராகமாய் 
இனிக்கிறது என் செவிகளில்.
வேறு என்ன பேறு வேண்டுவேன்
என் தலைவியே
எம் வாழ்வு சிறப்புற்றதே
உந்தன் அன்பொளியில்!

Saturday 4 December 2021

பிறந்தநாள்

கடற்கரையில நீ பார்க்க
கடலும் உன்னுடன் சேர ஓடிவரும்.
நீ உடுத்தும் உடைகள் கவிதைகளெனில்
உன் சேலை
தலைப்புடன் கூடிய கவிதை
நிலவை காட்டி
உணவை ஊட்டும் அம்மாவை போல்
உன்னை காட்டி
காதல் ஊட்டுகிறது வாழ்க்கை
"தீ"க்கதிரின் "பி"ன்னிருக்கும்"கா"ற்று
மேலெழுவது போல்
உன் முகம் என்றும் மேல் மலர உடனிருப்பேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பே.

பின்குறிப்பு:

இதை நான் எழுதவில்லை, 
என்னை எழுத வைத்த கவிதை நீ!

Sunday 11 July 2021

சாரல்

கற்றை கூந்தல் சூடிய 
குட்டி மின்னல் இவளோ
ஆங்கிலத்தில் அழகு தமிழ் கொஞ்சும் 
தேன்மழை சாரல் இவளோ

உன் மழலைதனத்தோடு
பழகும் வேளையில்
இந்த சித்தார்த்தன் புத்தன் ஆகிறேன்
கடவுள் இவர்களுகளித்த பரிசோயென
எப்பொழுதும் இராகவை 
பார்த்து வியக்கிறேன்

இரவினில் உறக்கம் கொள்ள
செல்லம் கொஞ்சுகிறாய் அம்மு தனை
வாழ்வில் போதனைகள் எதற்கு கண்ணே
உன் குட்டி கைகளில் 
கழுத்தினை கட்டி கொண்டு 
காற்றாட நடந்தால் போதாதா?

களங்கமில்லா தூய உள்ளம்
பட்டாம்பூச்சியின் சிறகு விரித்து
இன்னும் பல சிகரங்கள் எட்டுவதற்கு
என் அன்பான வாழ்த்துக்கள்
 

Thursday 21 January 2021

விதை

தூரத்து அலையோசை
இரவு பயணம்
கைப்பேசியை தீண்டி
மீண்டும் மீண்டும் பார்கிறேன்.

உன் பெயர் இல்லை
உன் குரல் இல்லை
உன் கண்கள் இல்லை
உயிரற்ற வெளிச்சத்திரை மட்டுமே.

இந்த தனிமையில்
நான் மட்டுமே நனைகிறேனா?
தோள் வேண்டாம் 
இந்த இருளின் குரலிற்கு
கேட்கும் செவியும் இல்லயா?
காலையும் மாலையும் 
காதலாய் காத்திருந்தேன்
என் வலிகள் உனக்கோர் பொருடல்லயா?

நீ விலக விழையும்
தூரம் செல்கிறேன் 
இம்முறை உனக்கென 
கண்ணீர் சிந்த போவதில்லை
உன்னை நினைத்து 
நாட்களை கிழிக்க மாட்டேன்
உன் அன்பை பெற 
பலமுறை தோற்றுவிட்டேன்
இதுவரை கேட்காத இதயம் 
இனியும் திறந்திடுமா என்ன?

உன் நினைவுகளுக்கு நன்றி
இந்த இடத்தில் உன்னை நிறுத்திவிட்டு
விலகி செல்கிறேன் புது விதையாய்

காலம் உருண்டோடும்
மீண்டும் ஓர் வசந்த காலம் வரும்
அன்று என் நனைவில் 
கரிதுகளாய் கரைந்திருப்பாய்.