Sunday 19 December 2021

கவிதையின் காதலன்

கைகளில் அடங்கும் நவயுகத்தில்
அனைத்தும் சலித்துவிடும்.
காதலா, அலைபேசு
கோபமா, டிவிட்டரில் கீச்சு
என்னும் கோபமா,
முகத்தோடு எதிர்கொள்ள வேண்டாம்
முகநூலில் தடை செய்தால் போதும்.

இரசனைகள் மாறுகையில்
உணர்வுகளுக்கும் இனி பஞ்சமோ?
முதல் ஸ்பரிசமும் முத்தமும்
காணொளியில் களித்து
சமுக இடவெளியென
மனமுறிவை பெருக்கி
எதனை நின்று இரசிக்க மறந்தோம்?

துரித உணவு காலமிது
கலவியை கடந்ததோர் படுக்கையில்
ஒரு கண் ஆர்வத்தால்
இன்துணை மேல் வைத்துறங்கும்
அன்றிலின் காதல்
தலைமுறை கண்ட பழமையோ?

கணிணியில் மின்னஞ்சல் செய்தால்
உணர்ச்சிகளின் கலவையினை
தேவைக்கேற்ப
இயந்திர ஊக்கிகள் கடத்துமோ?
கவிஞர்கள் தொல்லை இல்லை
எதுகை மோனையோடு
நிரல்களே தேம்பாவணி பாடும்.
இல்லத்தில் இருவரும்
தத்தமது மடியில்
இல்லாளை விடுத்து
செல்போனை கொஞ்சவோமோ?

உன் முடியினில் விளையாடும் கூடல்
காதலை பின்னோக்கி தீற்றினாலென்ன?
நான் ஏட்டிலிட்ட பழங்கதையாகவே
ஏந்தி கோதிட வேண்டுகிறேன்.

எண்ணை தோய்த்த முகத்தினில்
எளிதாய் தெளிவுரும் சருமம்
என் கற்பனைகள்  பொலிவுற
உன் நினைவினில்
சலவை செய்தால் போதாதா?

இவ்வாழ்க்கை உனை
ஆரதிக்காமல் போகுமாயின்
எம் தேகம் எரித்த கரித்துகளை
பென்சிலாக வடித்து
உனை வரையவே வேண்டுவேன்.

இவ்வசர யுகத்தின் கல்வெட்டுகளில்
தனிப்பெரும் காதலனாக
வாழ்ந்திருப்பேன் போதுமெனக்கு.

No comments:

Post a Comment