Saturday, 27 July 2024

102.இரயில் பயணம் (Memoirs of a Journey)


தண்டவாளத்தில் ஓர் அதிர்வு ஒலி

ஏதேனும் ஒரு இரயில் கடந்திருக்கலாம்

அல்லது ஓர் இரயிலின் 

வருகையினை எதிர்பார்த்திருக்கலாம்.


இரயில்கள் ஒய்வெடுக்கலாம்

எங்கேனும் ஓர் 

ஆலமர நிழலில் 

யாருமில்லா நிலையத்தில்

இளைப்பாறலாம் 

ஆனால் பயணங்கள் ஓய்வதில்லை.


அதோ இன்று என் கனவுகளை 

சுமந்து செல்லும் இரும்பு குதிரை

நாளை,

எவரேனும் என் பயணத்தை தொடரலாம்.


இரயில் இருக்கையின் வழியே

வெளிகாட்சிகள் யாவும் 

வேகமாய் பறந்தோட

யாருக்காக காத்திருக்கிறது

இச்சாலையோர மரங்கள்.


கரையோடும் வெள்ளமென

எனை சூழும்

நினைவக பேழை

இரயிலின் தாலாட்டு

சிறு வயது சேலைத் தொட்டில்

கண் மூடி

உறங்கி போகிறேன்.


காவிரி தீவின் மேல்

வழிப்போக்கனை வருடும் குளிர்க்காற்று

உலகின் கண்களில்

மனிதனின் இரயில் ஓர் செயற்கைக் கோற்புழு.


விலகா திரை- மூடுபனியில்

கம்பீரமாய் ஸ்ரீரங்கத்து கோபுரம்

காலை துயில் எழுகிறேன்.


வழித்தடம் நின்றவுடன் 

கண்களால் நன்றி கூறி

காலச்சக்கரத்தின் வேக சுழற்சியில்

கையசைத்து தொடர்கிறது புது பிரயாணம்.


புலம் பெயரும் பறவை

உடைமைகள் தூக்கி செல்கிறதா என்ன?

தீயில் கரித்துகளென 

பிடித்தம் இல்லா மறுநொடி வாழ்க்கை

காலமும் வயதும் யாருக்கேனும் நிற்பதில்லை

பயணத்தின் அந்நொடி நினைவுகளோடு

விடைபெறுகிறேன் !

நன்றி மீண்டும் வருக.

 




Saturday, 6 April 2024

101.வானுர்த்தி கவிதைகள்

காதல் எனும் தீபம்
வழியாறியாக் காட்டினில்
கொடும் இருளில்
கைப் பற்றி அழைத்து செல்லும் மழலை.

இமைப்பின் கரப்பாக்கு அறிவல்

என்கிறதாம் வள்ளுவம்.

குறள் அறிய தேவையில்லை பெண்ணே,

நீ இல்லா எல்லா இரவும் 

நோவும் இந்த கண்களை பார்!


அமைதியான புருக்ளின் பாலத்தின் கீழ்
பாய்ந்தோடும் ஹட்சன் ஆற்றினை போல
செயற்கையான என் புன்னகையின் கீழ்
தனலென சுடுகிறது உன் தனிமை.

உனக்காய் இதுவரை 

பல்லாயிரம் அடிகள் தூவியுள்ளேன்.

என்னவளை எண்ணுகையில்

ஊற்றாய் வரும் வரிகளை

பல்லாயிரம் அடிகள் மேலே

நிலவின் வாயிலில் வடிக்கிறேன்.


நிலவின் நிழல் சில நேரம் 

பெருச்சூரியனை மறைக்கும்.

தீயினில் இட்ட பசுநெய் 

பின் தீயினுள் சங்கமிக்கும்.

காழிலா இந்த இதயம் 

துடித்திருக்க வேண்டும் உன் கரம்.

Saturday, 30 March 2024

வலசை பறவை

 

இன்றும் உன் தலையணைனில்

தான் உறங்குகிறேன்

கடல் மீது வலசை போகும் 

வம்பை நாரைக்கு- 

மிதக்கும் மரக்கிளை கிடைப்பதைப் போல.


தனியாய் புலம் பெயர்ந்து

உன்னிடம் சேரும் வரை

சுற்றி இருக்கும் அமைதி

அலைகடலா முழுமதியா?

எதை கொண்டு அளவிடுவேன்.


நீ இல்லா இருளில் இருக்கிறேன்

ஒளியெல்லாம் நீ!

எதை பற்றி எழுதினாலும் 

என்னுள் நிரப்பும்

கவிதையெல்லாம் நீ!

உன் கைககளில் சேர

உறக்கமில்லாமல் காத்திருக்கிறேன்

காற்றில் குறைந்த

வாசமெல்லாம் நீ!


தீயின் குணம் 

பிடித்த அனைத்தும் தனதாக்கி கொள்ளும்.

காகிதங்களின் குணம்

பிடித்தவைகளை தன் மேல் படிந்து கொள்ளும்.

நான் நீ என்னும் தீ பிடித்த காகிதம்

உன்னால் நானும் தீ ஆனேன்.

உனக்காகவே எழுதும் காகிதமும் ஆனேன்

இன்னும் நூறு எழுதுவேன்

என் காதல் தீராது...

Wednesday, 27 March 2024

இன்னும் ஒன்று

இரவினை முடிக்கும் உரையாடல் நீ

காலை பனியின் எழுகுரல் நீ

இத்தனை சரளமாய் 

எழுதும் தமிழும் நீ

ஏதோ இழந்து அலைகிறேன்

என் தேடலின் முடிவும் நீ.


வானத்தின் எடை கூடினால்

பெரு மழை பெய்யும்

உன்னை காணாது இருக்கும்

பெரும் பாரம் தனை

எதை கொண்டு பொழிவேன்.


நீ என்பது என்னுள் எழும் உணர்வு

நாசியினில் புகும் வாசம்

கனவினில் கேட்கும் கொலுசு.

மாதம்தோறும் உன் நகல் வேண்டினேன்

சத்தியமான இறைவனும் 

செவி சாய்க்கவில்லை இன்னும்.


இந்த வரிகள் 

உனக்குள் இறங்கவில்லை எனில்

என்னிடமே கேள்.


ஒளியென்பது 

சிலருக்கு அகல் விளக்கு

சிலருக்கு மின்குமிழி

சிலருக்கு மின்மினி


தீதும் நன்றும்

பிறர் தர வரா

காதல் நீ அன்றி எவர் தருவார்?

Sunday, 24 March 2024

புல்லாங்குழல்


நீ அற்ற உரையாடல்கள் ஏனோ சலிக்கிறது

இங்கு நானாக படுக்கையில் எழுகிறேன்

இல்லை ஏதேனும் ஒன்றாக இருக்கிறேன்

சோழரோ உடையரோ எவர் நிலம் ஆயினும்

எனை ஆளும் காதல் தேசம் நீ.


கதவடைத்தக் கூடு எம்மனம்

எத்தனை முயன்றாலும்

பெண் பறவை அன்றி -

அன்றில் ஓசை இங்கு ஒலிக்காது.


என் சுயமியின் உருவம் நீ

இப்பொழுது பயணம் பிடிக்கவில்லை

உணவு வேளை தெரியவில்லை

இறகினை போல் காலத்தில் விழுகிறேன்

ஏதோ ஞாபகம் இல்லா வரிகள்

உன்னை பற்றி விழுந்து கொண்டிருக்கும்.


தீ பொறியென நீயாக பேசு என சொல்லாதே

பிடித்தமான குளிர் காற்று நான்

காற்று என்றும் மவுனம் கலைவதில்லை

புல்லாங்குழலில் புகும் வரை.

அல்லிக்குளத்து மீன்


நானும் தனிமையும்

நதியோரம் அமர்ந்திருக்கிறோம்

புறம் பற்றும் வெப்பம்

வெய்யில் சுடுவதாய் கூறியது

இன்றைய நண்பகல் அனல்

நீ அற்ற அகத்தனிமையை

விட கொஞ்சம் குறைவு தான் 


இந்த ஒரு வாரம்

நான் யாருடனும் பேசவில்லை

நீ அருகே இல்லாது 

எனக்கு ஏது சொற்களும் கவிதைகளும்

உன் அறைகளோடு சேர்த்து

என் மனதையும் தாழிட்டு செல்கிறாய்

-என்ன செய்வேன்?

நமக்கான எதிர்காலம் வேண்டி

இடைவெளிகளை ஏற்றுக்கொள்கிறேன்


இந்நதியின் ஓரம் 

அழகான ஓர் குளம் உள்ளது

அக்குளத்தினுள் அல்லியும்

ஓற்றை மீனும் உள்ளது


அக்குளத்தின் பெயர் அல்லிக்குளம்

குளத்தினுள் எத்தனை மீன்கள் இருத்தாலும்

என்றும் அது அல்லிக்குளம் தான்

அல்லி அழகானது என்பதினால் அல்ல

அல்லி தான் 

குளத்தின் இயற்கை அரண் 

அல்லி கொடியாயினும்

குளத்தின் உயிர்வாழ் அடித்தளம்


மீன்கள் அல்லியினை நோக்கி வாழும்

அல்லிக்கொடியினை சுற்றும் மீனாய் 

இங்கே இருளில் சுற்றுகிறேன்


தீப்பந்தத்திற்க்கும் வெண்ணிலவிர்க்கும்

இரவில் பூக்கும் அல்லிக்கு வேற்றுமை தெரியாதா?

பிடித்தமான விழிகள் யாதெனில்

காலையில் உன்னோடு விழிக்கும் கண்கள் தான்.

காதல் என்பதே நீயென்பதால்

இனி யாரோடு சாயும் இம்மனம்.

Saturday, 10 December 2022

அவள் கவிதை

 

ஒர் அமைதியான
அமெரிக்க நதியோர கிராமம்
குளிர்கால வரண்ட இரவில்
இல்லத்தின் தனிமை போக்க
ஊர் கூடி ஒளிவீசும்

எப்பொழுதும் மௌனம் வீசும்
அவள் முகம்
காட்டாறாய் உள்ளே அலைபாயும்
என் மனம்

யாம் இருவரும்
ஆற்றங்கரையில் அமர்ந்து
விரல் இடுக்கின் தேநீர் குடுவையில்
குளிர் போக்குகையில்
எதிர் இருக்கும் ஓடையின் நீளமாய்
அமைதி

எப்பொழுதும் அவள் தான் தொடங்குவாள்
"நீங்கள் கவிதை எழுதி
வெகு நாட்களாகிறது,
என் பிறந்தநாளன்று
வந்த வாழ்த்துகள்
உங்கள் கவிதையின் வரவையும் கேட்டன"

நான் சற்றே அமைதியாய்
"நானும் கொஞ்ச நாட்களாய்
தேடிக் கொண்டிருக்கிறேன்
என்னையும் கவிதைகளயும்"

அவள் இதழ் திறந்து கேட்கிறாள்
நான் இன்னும் துழாவி கொண்டிருக்கிறேன்
கவிதை நெருக்கமாய் வேண்டும்
ஆனால் கைவசம் இல்லை
திருட்டிலும் பழக்கம் இல்லை
அவள் இதயத்தை தவிர,
மேலும் என் எழுத்தின் முத்திரையாய்
அவள் பெயர் வேண்டும்

விசரம் தவிர்த்த தழுவலோடு
அவளை உச்சி முகர்த்து
நதியோரம் நடக்க அழைத்தேன்
அந்த இடைவெளி
கவிதை தந்துவிடும் ஓர் அவகாசமாய்

நேரம் தெரியாமல் நடந்தோம்
அவளிற்கு பசி வந்தது
இங்கு இன்னும் கவிதை வரவில்லை
மெதுவாய் அவளிடத்தில் சொன்னேன்
உனக்கு பிடித்த கவிதை
பிறகு சொல்கிறேன்
எனக்கு பிடித்த கவிதை
இப்பொழுது சொல்கிறேன்

அவளை அருகே அணைத்து
காதோரமாய் சொன்னேன்
"தீபிகா"