Wednesday 21 February 2018

கனவே கலைந்திடு

இறந்து போன நினைவொன்று
கலைத்து செல்கிறது உறக்கத்தை
காத்திருந்தேன்
கரம் பற்றினேன்
கண்ணீர் சிந்தினேன்
எதற்கும் உன்னிடம் கண்ணில்லை
உயிரே உனக்கு பார்வையாய் இருந்தேன்
கண்கள் மூடி
கொன்று புதைத்தாய் என்னை.

நீ வீசி சென்ற அன்று
கூந்தல் சூடாது கசங்கிய மாலை
தெருவோரம் சரிந்து கிடந்த
சிரிக்கும் புத்தர் சிலை.

என்னுள் இக்கணம்
பெயராக புலனாக
நீயாக நிஜமாக ஏதுமில்லை
தீ வைத்த சிதையின்
தழும்பாக மட்டுமே இருக்கிறாய்
காலம் கடந்த நினைவே
கடிகார முள்ளாய் பிரிந்திடு.

இன்று காதலிக்கிறேன்
மாலையிட்டு மையலாய்
கொள்ளை கொண்டவளை
நீ மறுத்த அத்தனை அன்பையும்
அவளிடத்தில் கொட்டுகிறேன்
என் மனவெளியில்.

தீக்கனா எனை தொடுத்தால்
பிகமென பாடி வருடுவாள்
காதலி அவளும் அருகிலில்லை
என் காயங்கள்
அவள் மருந்திட ஆறும்
ஆனால்
என்னை எரித்திடும் அனலே
காற்றோடு அணைந்திடு
நாளை நான் மறைந்தாலும்
அவளை காதலித்தவனாய் தான்
நிலைத்திருப்பேன்.

No comments:

Post a Comment