Tuesday 13 February 2018

தலையணை

தனிமையில் நான் உன்னை சீண்டினால்
செல்லமாய் எனை தாக்கும் ஆயுதம்
எனை தழுவிய பொழுதெல்லாம்
உந்தன் கூந்தல் சேர்க்கும் பேழை
தனியே தவிக்கும் நள்ளிரவில்
கண்ணீரின் ஈரம் தாங்கும் நுதிக்கை
இரை தேடும் தனி பறவையாய்
ஊர் எங்கும் திரிந்துவிட்டு
இரவில் உன் நினைவை இசைக்கும்
என் பிரிய வானொலி -தலையணை

கனவில் நீ தந்த முத்தங்களை எல்லாம்
தலையணை உறையில் சேர்பித்து
நினைவில் கொஞ்சும் கவிதையாய் வடிக்கிறேன்
நிலவின் மடியில் வெண்மேகமாய்
உள்ளம் முழுதும் தீயே பரவுகிறாய்
வஞ்சி என்னுள் உறங்கடி
சோம்பல் முறித்து அழகாய் தூங்குகையில்
நீ கேட்டிறாத பல கவிதைகள்
என் தலையணையுள் அடக்கம்
கொஞ்சம் அதனிடம் கேளடி

இலவம் பஞ்சினை இறுகி அணைக்கும் திண்டுறையென
நெஞ்சறையில் உன்னை சுமக்கிறேன்
பிரிந்திருக்கும் காதலர் தம்மை
கருப்பு வெள்ளை புகைப்படம் போல்
பிணைத்திருக்கும் விந்தை
தலையணையில் பிறக்கும் காதல் சிந்தை

என்னை தினமும் உறங்க சொல்லும்
உன் உதடுகளுக்கு சொல்
உன் மடியிற் சிறந்த தலையணை
இன்னும் பிறக்கவில்லை.

No comments:

Post a Comment