Tuesday, 28 February 2017

அவளதிகாரம்

ஒரு கை மௌனத்தில் ஆழ்ந்திருந்தேன்
இரு கரம் கொண்டு அழைத்து வந்தாள்
நிலவின் நிழலி தோற்கும்
கார்மேக குழலி ஒருத்தி

காவினில் சேர்ந்திழைத்த மாலையென
பாக்களை கோர்த்து
அவளுக்கென்று வடித்தேன்
என் வரிகள் அவளிடத்து அர்ப்பணம்.

மழை என்று சொன்னால்
பச்சிளம் கொண்டு வருவாள்
மழை தொட்ட மனதை
நான் வருடக் கூடாதா?

காகித ஓடம் கொண்டு
கண்டங்கள் கடக்க முயல்கிறேன்
வண்ணத்துப்பூச்சி இறகு கொண்டு
விண்மீன் தழுவப் பார்க்கிறேன்
ஓசை ஓதும் குழல் கொண்டு
குடிநீர் அருந்த தோற்கிறேன்.

குளிர் கொண்ட விட்டில் மனம்
வேண்டி தெரிவது ஆகிடத் தீ
தழலென தெரிந்தும்
விழுந்து மாயும் விரும்பி
நெருப்பினில் எரிகையிலும்
கொண்ட காதலில் என்றும் விலகா!

உன் தீயில் கரைகிற விறகாயினும்
என் நினைவழிந்து நிழலாகினும்
ரசம் தொலைந்த ஆடியாயினும்
வீழ்ந்து சிதறுவேன்
ஒவ்வொரு சில்லிலும்
உன் முகம் காண்டிட.

Tuesday, 14 February 2017

திரும்பி வா சகியே

காழ் மனம் கொண்டவள் உன்னை
கண்ணீரில் அரியும் முன்
களூரிற்கு பறந்தாயடி கண்ணம்மா
காலத்தில் ஓர் தடம் பதிய வேண்டும்
திரும்பி வா சகியே

உன் மனா தெரிகையில்
என் மனம் கவர்ந்தாய்
இருள் மறை பூனையாய்
தேடி உன்னை தொலைக்கிறேன்
திரும்பி வா சகியே

வாட்ஸ்பில் சண்டையிட்டு
ஸ்மைலியாய் மறையும் என் நிலவே
கோளோடு யுத்தம் கொண்டு
கிரகணமாய் மறையாதே
முழு இரவும் நமக்கென விழித்திருக்கும்
திரும்பி வா சகியே

உன்னோடு கழித்த பொழுதினில்
என்னை நான் மீட்டெடுத்தேன்
இதயத்தின் காயம் வழியே
குருதியாய் வழிந்தோடினாய்
காயங்கள் ஆறுமுன்
கானலாய் கரையாதே
திரும்பி வா சகியே

எத்தனை வர்ணனை தீர்த்த பின்னும்
துளிர்க்கும் காதலாய்
வடிக்கும் வரிகள் உனக்கெனவே பிறக்கிறது
என் வாசகியே

Tuesday, 10 January 2017

(மகா) கவி

மகாகவி ஆக
எத்துணை காலம் வேண்டும்?
தெரியவில்லை ....
அவளுக்கென்று
காத்திருந்த கணங்களை
எண்ணிவிட்டு சொல்கிறேன்

Saturday, 7 January 2017

கற்பனை தோழி

சகடதின் சாளரம் ஓரம்
மெலிதாய் இழைந்தோடும்
இளவேனிற் சாறல்

நெரிசல் சிறையில்
சிக்குண்ட  என் காடியின் எதிரே
குளிரின் இதமாய் போர்த்திட
ஒரு உடை ஈர் உடல்
பெரு மழை தவிர்த்திட
குடையினை தழுவிம் நாற் கரங்கள்
மற்றும்
காதலின் தடுமன் தீர
கணக்கில்லா முத்தங்கள்.

தனிமையின் துவீபமான
என் குறை தீர
கற்பனை தோழி ஒருத்தி வந்தாள்
தன்னை யாதென வியக்கும்
மாமல்லன் மனங்கவர் சிற்பமவள்.

ஏ தோழியே!
கற்பனை உலகில்
தன் பலம் தந்தாய்
உன் மொழி கேட்க
தன் மடல் உள்ளது என்றாய்
தனிமை என்றோர் மாயை
அது நம்மிடம் இல்லையென
கரம் கொடுத்தாய்
கணம் பொழுதும் உன்னொடென
கணை அளித்தாய்
நினைவில் எங்கே துறக்கிறாய்?

நித்தம் உன்னோடு வாழ்த்திட
அடைக்காக்கும் என் இரவுகள்
உன்னிடம் சொல்வதிற்கென
பல புனைவுகள் இருக்கிறது
உன்னிடம் தீர்த்து கொள்ள
பல யுத்தங்கள் இருக்கிறது
உன்னோடு களிக்க
பல அதிசயங்கள் இருக்கிறது.

மற்றோர் திகதி உன்னோடென்று
கனவில் மறக்கிறாய் நேற்றோடு
உன் சிறகு விரிய காத்திருக்கிறேன்
அரவணைத்து கொள்.


Friday, 16 December 2016

வலி

"யாருமற்ற புயலில்
விலகி செல்கிறேன்.
ஓர் நாள்
வண்டல் மண் சுமந்த
ஈர சுவாசம் கொண்டு வருகிறேன்
பழங்கதை பேசலாம்.
மலர்களை கேட்டதாய் சொல்லவும்"
  -இப்படிக்கு ப்ரியமுடன் தென்றல்
வேதனையில்
மரித்து வீழ்ந்தன -மரங்கள்

Sunday, 4 December 2016

அவள் ஓர் அழகிய வானிலை

பிரிந்து சென்ற மழலையென
தனியே அழும் வானம்
மனதில் விரவிருக்கும் குளிர்
வாணலியில் கொதிக்கும் தேநீர்
சாரல் ருசிக்கும் தனிமை
கொஞ்சம் நெருக்கமாய்
கதை பேச - அவள்

இளம் ஞாயிறின்
முத்தமிட்ட ஸ்பரிசம் - அவள் எழில்
நீர்திரை மத்தியில்
அடிச்சிறுத்த வானவில் - அவள் உயரம்
கரு வானில் மறைகொண்ட
கார்மேக நிலா - அவள் நாணம்
கைகளில் சுருட்டிய
கரும் சுழல்கள் - அவள் கூந்தல்
தென்றலோடு அசைந்தாடும்
குறிஞ்சி இதழ்கள் - அவள் திருக்காணி

குறியீட்டு விளக்க
 காலத்தினாற் -
அவள் ஓர் அழகிய வானிலை

அவளதிகாரம் படைக்க
புனைவில் சரங்கொன்றை தொடுத்தேன்
எழுத்துக்களின் மீதம் போக
கொஞ்சம் வடித்து வைத்தேன்
மடியில் உறங்கும் அவள் கனவிற்கு

அவள் -"நான் அறிவேன்
என தெரிந்தப்போதும்
விளையாட்டாய் ஏன் மறைக்கிறாய்" என்பாள்
நானோ- "என்ன செய்ய
உன்னிடம் இருந்து ஒளிய
அறியாதவன் - நான்" என்பேன்

காலத்தின் பிரிவில்
தன்னை நினைவிழந்து செல்வேன்
என்பாள் எள்ளலுடன்
சிறகிருக்கும் பறவைகள் எல்லாம்
வேறிடம் செல்வதில்லை
கொண்டை ஊசி முனையில்
நீ அமர்ந்து கொண்டாலும்
என் நெஞ்சம் உன்னிடத்தில் தஞ்சம்


Friday, 21 October 2016

புலவி

எண்ணத்தில் உன்னை நிரவிக்கொண்டு
எழும் சொற்களை முதற்கொண்டு
எழுத்தாணி முனையில் துளையிட்டு
முறியில் உன்னை தொடுத்து வைத்தேன்.

பட்டின் சாலை வழி
செல்லும் பெண்ணே
குறுஞ்செய்தியில் புன்னகை உரித்து
ஏனடி கூட்டினுள் மறைகிறாய் ?

மறைப்பதினால்
தாழ் அடைப்பதினால்
படிக்க மறுப்பதினால்
தாழாது என் தமிழ் என்பேன்
நீ நிந்தித்தால்
என் கவி துறப்பேன்.

தவிர்ப்பதினால்
நம்மை பிரிப்பதினால்
என்னை எரிப்பதினால்
முழ்காது என் ஓர்மை என்பேன்
உன் விழி விடுத்து
தனி உலகம் காண்பேன்.

Meaning:
புலவி- பொய்யான கோபம்
ஓர்மை- மனம்

கரு: ஊடலின் விளைவால் பேசாதிருக்கும் தோழியின் மேல் சினத்துடன் எழுதும் தோழனின் வரிகள்.
 கவிஞர் "வைரமுத்து" வரிகளிலிருந்து inspire ஆகி எழுதிய வரிகள்.
நன்றி -"டுயட்"   திரைப்படம்