Monday, 18 June 2018

ஒளி

ஒளி கொஞ்சம் கூராய் கிழித்து
எம் சிரத்தை பழித்து
வலியில் வீழ்த்தி செல்கிறதாம்
மருத்துவர் சொல்கிறார்
என்னை கொல்லும் வலியின் காரணி
ஒளி தானென ஒப்புக்கொள்கிறேன்.

அது தினமும் என் கண் முன்
காதல் வைத்து
வார்த்தை வாள் வீசி
எங்கோ ஓரிடத்தில்
கண் சிமிட்டும் நிலா!

ஒரு வேளை
அவள் பெயரே ஒளி என்பதால்
"ஒளி"ந்து கொண்டே
அகக் காதல் மொழியில் முத்தத்தூது
முகங் காட்டா வழி சங்கீதாஸ்வரம்
அவளிற்கு பிடித்தமானது போலும்

குளிகை தனை தேடி
அவை தீர்ந்து விட்டதென்கிறாள்
ஆம் காணவில்லை
கடவுள் வடித்து வைத்த வளைவொன்று
அடுத்த முறை
நான் வந்து வரைய வேண்டும்
அவள் கன்னத்தில்.

நித்திரை தொலைத்தவனுக்கு
மாத்திரை வலி போக்குமா?
உன் திரை என்னை வதைக்கிறது.
நீ பேச அழைத்தால்
விண்மீன்களும் வந்திறங்கும் இங்கு
நான் பேச அழைத்தால்
தோட்டத்து ரோஜா சொல்கிறது "நத்திங்"
வானின் கீழ் அனைத்தும் உனது
என்னையும் சேர்த்து .
மீண்டும் சேரும் வாழ்க்கை அருகில்
அந்நாள் வரை
அந்தி பொழுதில் அல்லனாய்
தொல்லையாய் அழைப்பேன்
(மனம்) நிறைய பேசடி மனைவி.

உங்களை பிரிந்து புண்ணான நெஞ்சம்
புன்னகைக்க தெரியவில்லை என்பாள்
என் பால் கொண்ட
காதலிற்காக கேட்கிறேன்
கொஞ்சம் சிரி :)

தீ பக்கத்தில் வா
தீபிகாவாய் முத்தமிடு காதலி.

Saturday, 5 May 2018

நிழற்குடை

காதலி உறங்கும் இரவே
உன் அருகே படுத்திருந்தால்
தேவதைகளின் துயில்
எத்தனை அழகென அறிந்திருப்பேன்

உறக்கத்தில் உன்னோடு பேச
நான் அனுப்பும் காதல் முத்தங்கள்
உன்னை தொட்டு விட தயங்கி
என்னுள் புதைகிறது மன அழுத்தமாய்

காதலியே உனக்காய் காத்திருந்து
என் பகல் முழுதும்
உனது இரவை விட கருமையாய்
ஊமையின் வலியாய் உடைக்கிறது

உறக்கத்தில் என்னை எழுப்பி
இரவுத்தோறும் உரையாடு என்பாய்
காதலி விழிகள் மல்லிகை மொட்டுகள்
எங்ஙனம் அவிழ செய்வேன் நான்?

மழை நீர் சீண்டினால்
என் உறைக்குள் உன்னை போர்த்துவேன்
ஒவ்வொரு இரவும்
உன் விழி நீர்
சங்கமிக்கும் காரணி நான்
முகப்பருவாய் உன்னோடு இருந்து வலிக்கிறேன்
என் காதலின் பயன் தான் என்னவோ?

உலகத்தின் காதலர்கள்
அவர்தம் துணைக்கு முத்தமிடுகையில்
என் காதலிகென எங்கோ அமர்ந்து
பொருள் தொலைத்த கவிதைகள் தொகுக்கிறேன்

உன் மனதை தொட
பொருள் வேண்டாம்
காதலியின் அருள் பெற
என்ன தவம் வேண்டும்?

என்னை கொல்லும் தனிமையும்
உணவற்று கிடைக்கும் பணமும்
நீ அழைத்த மறுகணம்
வீசி விட்டு வருகிறேன்
உன் மடியில் வாழும் அந்நொடி
சொர்க்கம் கூட வேண்டாம் எனக்கு
என்னும் என் மனம்
உனக்கு அறியா வேறு மொழியா?

உன் இதயம் இதை புரியாதெனில்
என்னை அழைத்திடும் வாசல் ஏது?
என் காதலியின் மனம் ஏற
நிழற்குடையில் காத்திருக்கிறேன்
சீக்கிரம் வந்து என்னை அணைத்துக் கொள்.

Tuesday, 17 April 2018

மன்னித்து விடு காதலி

சிறு வயது மாந்தோப்பு நினைவுகள்
கனவில் வந்து செல்கிறது காதலி
எட்டா உயரத்தில் பறித்த கனியாய்
என் மனதை பறித்து சென்றாய்.

சிரித்தவள் என்னை பறித்தவள் மனதில்
முள்ளினை தைத்தேன் ஒர் முறை
இன்று மற்றவரின் புறம் மீது
என் மனைவியின் பிழை இருக்காதென
முன் நின்று சொன்னதடி காதல்.

உன் பிழை என்று
இன்று எதை சொல்வேன் நான்?
இதயம் உடைக்கும்
என் மீதான காதலை தவிர
எளிதாய் உன்னை பழித்து விட்டு
கடல் தாண்டி கண்ணுறங்குவேனோ நான்?

கரம் பிடித்த உன்னை
பார்க்கும் திசையெங்கும் தேடுகிறேன்
உன்னோடு சிரிக்க மறக்கிறேன்
நீ பேச துடிக்கும் காலை கனவில்
கண் தெரியா இருட்டினில்
தலையணை நனைக்கிறேன் நான்

நேர்மறை நெருக்கமாய்
சேர்ந்திட கூடா எதிர்மறையென
இன்று எல்லோர் ஏசும் காரணியாய்
என் காதல்

என்னால் ஏன் இத்தனை துன்பம் உனக்கு
இதய கீறலில் சொட்டும் இரத்தம் புதைத்து
நீ விழிக்கையில் ஆசை முத்தமிட்டு
கொல்லும் வலியின் மேல்
புன்னகை போர்த்தி
அருகில் அணைக்கும் துணைவனாய்
ஒவ்வொரு பொழுதும் வாழும் கணவனாய்
எப்பொழுது நிகழப் போகிறேன் நான் :).

Tuesday, 13 March 2018

உறங்கும் தேவதை

நாம் இருவரும் கூடும்
இரவு பொழுதில்
என்னை விடுத்து
விளக்கை அணைக்க சொல்கிறார்
உன் தந்தை

செல்லமாய் உன்னை சீண்ட
சினம் கொண்டு நோக்காதே
நேரலையில் நெஞ்சில் காயம்
உன் மூக்குத்தி

முன் விழும் முடிகளை
பின் தள்ளி விடாதே
ஒதுங்கும்  முடியில்
ஒளிந்திருக்கும் அழகால்
மூச்சு நின்று விடுகிறது

நெற்றியில் வைக்கும் குங்குமமாய்
குடியிருக்கும் இதயத்தை
அவ்வப்போது தீற்றாதே
இராமன் தொட்ட அகலிகையாய்
உயிர்ப்பிக்கிறது கவிதைகள்

மனதை சிறை கொண்ட
தனிப்பெண் உன்னை கவர
வார்த்தை தேடி தவிக்கிறது சிரை
படித்த உடன் பகிர மாட்டாய் மனதை
அலைப்பேசி அழைக்க காத்திருந்து
இம்முறை வலிக்கும் இதயம்

மறுமுறை உன்னை பார்க்கும் முன்
நூறு கவிதைகள் முடித்தாக வேண்டும்
எழுத்தையும் ஆணையும் சூடிய பின்
உன் விழியின் முன்
கூரிழந்து நிற்கும் என் எழுத்தாணி .










Sunday, 11 March 2018

ஒளிச்சேர்க்கை

A short poem on daylight saving dedicated to my wife -Deepika

அன்பார்ந்த காதலே உனக்கொரு மடல்.

அலைப்பேசியில் அளவளாவும் பொழுது
அதிகாலை 1.59 மணியின்
பின்வரும் நொடி மூன்றென ஒலித்தது.
இரு கண்ணிமை பொழுதினில்
இரண்டரை நாழிகையும்
இரண்டற கலந்திடுமா?
ஐன்ஸ்டீனின் சார்பியலில்
காதலும் சார்ந்திடுமா?
காலை ஒளிச்சேர்க்கையில் காதலாகி
தேநீர் கோப்பையில் கலந்திடுவோமா?
நாமிருவரும் ஈரிண்டென நல்கி
பிரிந்திருந்த காலம் தனை
ஒடுக்கற்பிரிவில் இணைத்து
ஒர் உயிரினில் பிணைந்திடுவோம்.

Monday, 26 February 2018

பிப்ரவரி 25

ஏதோ ஒரு பாடலும்
நம் புகைப்படமும்
இங்கே வீசி செல்ல எண்ணம்
ஆனால் என்னை முழுதாய் கொண்டு
மூச்சிரைத்த நாளை
இன்னொரு நினைவில் படைப்பதாய் எண்ணமில்லை.

மீண்டும் ஒரு முறை அல்ல
இறுதி முறையாய் - அந்த காதல் பார்வையை
பார்த்துவிட்டு பறந்திட வந்தேன்
உன்னை மணப்பெண் ஆக்கிட
வீட்டில் நடப்பதை அறிவேன்.

செங்கோடு கருப்பு வெள்ளையில் நின்றிருக்க
அங்கே நீல வானின் தேவதை இறங்கி வந்தாள்
உன் எண்ணம் உடை தேர்வில் இருக்க
நான் உன் உரியவனென தெரிவாக துடித்தேன்.

அந்த சாலை ஓர கடைகள் அலைந்தோம்
உன் கைகள் பற்றிடும் தொலைவு வரை நடந்தேன்
வழியில் என்ன கடந்தேன் தெரியவில்லை.

அத்தனை கோடை உன் மேல் பாய்ந்திட
புது மலரென நீ சிரிக்க
உன்னை பார்த்து கொண்டே யாவும் மறந்தேன் நான்
நீ சிரிக்கும் பொழுதினில்
இதயம் உறைந்திருக்க
தாமிய கணம் தீண்டிய சிகையில்
மீண்டும் மீண்டும்
காதலாகி விழுந்தேன் நான்.

இத்தனை நாள் முயன்றும்
எந்த காதலும் பொருந்தவில்லை
கருடன் இட்ட மாலையென
அறிதாய் ஓர் இதயம் திறந்தேன்
உன்னை அன்றி வேற்றோர் பெண்ணை விரும்பவில்லை.

இன்று நீயும் நானும் காதல் பேச
மத்தியில் அமர்ந்து தோள் சாய
என்னிடம் அருகாமை இல்லை
நீ என் மொழி
உன்னிடம் கவிதை கொள்ள வருவேன்
இன்னும் பல தனிமை கடந்து
என்னோடு நீ இருப்பாய் காத்திருப்பேன்.

Wednesday, 21 February 2018

கனவே கலைந்திடு

இறந்து போன நினைவொன்று
கலைத்து செல்கிறது உறக்கத்தை
காத்திருந்தேன்
கரம் பற்றினேன்
கண்ணீர் சிந்தினேன்
எதற்கும் உன்னிடம் கண்ணில்லை
உயிரே உனக்கு பார்வையாய் இருந்தேன்
கண்கள் மூடி
கொன்று புதைத்தாய் என்னை.

நீ வீசி சென்ற அன்று
கூந்தல் சூடாது கசங்கிய மாலை
தெருவோரம் சரிந்து கிடந்த
சிரிக்கும் புத்தர் சிலை.

என்னுள் இக்கணம்
பெயராக புலனாக
நீயாக நிஜமாக ஏதுமில்லை
தீ வைத்த சிதையின்
தழும்பாக மட்டுமே இருக்கிறாய்
காலம் கடந்த நினைவே
கடிகார முள்ளாய் பிரிந்திடு.

இன்று காதலிக்கிறேன்
மாலையிட்டு மையலாய்
கொள்ளை கொண்டவளை
நீ மறுத்த அத்தனை அன்பையும்
அவளிடத்தில் கொட்டுகிறேன்
என் மனவெளியில்.

தீக்கனா எனை தொடுத்தால்
பிகமென பாடி வருடுவாள்
காதலி அவளும் அருகிலில்லை
என் காயங்கள்
அவள் மருந்திட ஆறும்
ஆனால்
என்னை எரித்திடும் அனலே
காற்றோடு அணைந்திடு
நாளை நான் மறைந்தாலும்
அவளை காதலித்தவனாய் தான்
நிலைத்திருப்பேன்.