Monday, 19 February 2018

நினைவுப் பேழை

காதலில் தான் எத்தனை நினைவுகள்
முதல் நாள் உடை என்ன?
இன்று காதலில் என்ன நிகழ்ந்தது?
எப்பொழுது ஊடல் கொண்டோம்?
அத்துணை நினைவுகளும்
காதலரோடு அழிகிறது
கணிணி போன்றே காதலும் மாறுகிறது.

முந்தைய காதல்-
பழகு, காதலி, கரம் கோர்த்து கொள்
மணம் செய், நிலவிற்கு செல்
கலவி கொள், குழந்தை பெற்றிடு
பணம் சேர், பெற்றதை கரை சேர்
மாழை இழந்து ஓர் நாள் மடிந்திடு.

துணை கொண்டவள் காதலை
முகநூல் முத்தத்தோடு நிறுத்திடு
நான்கு லைக் வாங்கி
நாலு கோடி பேரில் கலந்திடு.

பிந்தைய காதல்-
பார், பிடித்திடு
மறைவாய் முத்தமிடு
கலைத்திடு பின் கலைந்து விடு
முறித்து முகநூல் பதிவிடு
கொஞ்ச நாளில் வேற்று பெண்ணிற்கு மாறிடு.

ஆண்டுகள் கடந்தும்
உறங்கும் காதல்-தாஜ்மஹால்
பிரிந்து வாழும் காதல்- சலீம் அனார்க்கலி
பிரிவிலும் சேர்ந்த காதல்-நள தமயந்தி
நாம் கொண்ட காதலும் சிறிதில்லை
கல்வெட்டில் பதிந்திட சோழனில்லை
காலத்தில் நிறுத்திட கம்பனில்லை

என்னை உருமாற்றி
நீ உருகிய காதலை
நின்று முத்தமிட்டு
நூறு பாடல் பூச்சூட வேண்டும் என் அமராவதிக்கு.

உன்னை பிரிந்து வாழும் ஒவ்வொரு நொடியும்
சிரம் போன்று ஒற்றையாய் வலிக்கிறது இதயம்
இந்த காதலும் அன்பும்
வாழ்வின் நீரோடையில் மறையாது
அகவை கடந்த பின்னும்
ஓர் மாலை நேரத்து மையல் தருணம்
தீ பிங்கமென காதலி முகம் ஒளிர
அவளிற்காய் வரைகிறேன்
அருமன் தேன் துளிகளை.

கவிதையின் பின்குறிப்பு:
நான் உன்னை காதலிக்கிறேன்

Tuesday, 13 February 2018

தலையணை

தனிமையில் நான் உன்னை சீண்டினால்
செல்லமாய் எனை தாக்கும் ஆயுதம்
எனை தழுவிய பொழுதெல்லாம்
உந்தன் கூந்தல் சேர்க்கும் பேழை
தனியே தவிக்கும் நள்ளிரவில்
கண்ணீரின் ஈரம் தாங்கும் நுதிக்கை
இரை தேடும் தனி பறவையாய்
ஊர் எங்கும் திரிந்துவிட்டு
இரவில் உன் நினைவை இசைக்கும்
என் பிரிய வானொலி -தலையணை

கனவில் நீ தந்த முத்தங்களை எல்லாம்
தலையணை உறையில் சேர்பித்து
நினைவில் கொஞ்சும் கவிதையாய் வடிக்கிறேன்
நிலவின் மடியில் வெண்மேகமாய்
உள்ளம் முழுதும் தீயே பரவுகிறாய்
வஞ்சி என்னுள் உறங்கடி
சோம்பல் முறித்து அழகாய் தூங்குகையில்
நீ கேட்டிறாத பல கவிதைகள்
என் தலையணையுள் அடக்கம்
கொஞ்சம் அதனிடம் கேளடி

இலவம் பஞ்சினை இறுகி அணைக்கும் திண்டுறையென
நெஞ்சறையில் உன்னை சுமக்கிறேன்
பிரிந்திருக்கும் காதலர் தம்மை
கருப்பு வெள்ளை புகைப்படம் போல்
பிணைத்திருக்கும் விந்தை
தலையணையில் பிறக்கும் காதல் சிந்தை

என்னை தினமும் உறங்க சொல்லும்
உன் உதடுகளுக்கு சொல்
உன் மடியிற் சிறந்த தலையணை
இன்னும் பிறக்கவில்லை.

Friday, 9 February 2018

காதலடி உன் மேல்

இன்று காதல் அறிவி தினம்
பெண்ணருவி உன்னில் தான் எத்தனை நீரடி
அதனுள் முழ்கிட காத்திருக்கிறேன்
-கடற் தாண்டி
ஒடையில் வழிந்தோடும் தாமரை இலையென
உன் நீரில் என்னை தவழ்ந்திடடி கண்மணி
அகன்ற வாய்காலில் மீன்கள் துள்ளிடும்
உன் விண்மீன் விழியில்
என் வாழ்க்கை துளிர்விடும்

கண்கள் தூரம் கடந்து
கனவுகளில் விழித்திருக்கிறேன்
அழகிய நினைவுகளின் கூடை சுமந்து
மயிலிறகால் கீச்சங் கீதாஞ்சலி இசைத்து
மீத முத்தம் முடியும் முன்
கண்ணுறங்க செல்கிறாய்
தொடர்பற்ற பொழுதினில்
இதழ் பற்றாது தொலைகிறேன் என்னை தேடடி

காதல் சின்னங்கள் தன் பால்
இதயம் மொழிவதில்லை
பார்வையற்ற வீணை மீட்க
இசையின் தாகம் வேண்டிடுமா?

இந்நாளில் உன் முகம் தாங்கி
மலர் கொற்றையில் கன்னம் தழுவி
தீ பிழம்பின் காலடியில்
உறங்கிடும் பனித்துளியென
உன் மடியில் உலகம் மறந்திட வேண்டும்
மழலைகள் பல கொண்ட பின்னும்
உனக்கென கவிதைகள் வரைந்திட வேண்டும்
என்னோடு காதலில் கூடடி
முழுமை நீயென வாழ்ந்திட வேண்டும்

Tuesday, 23 January 2018

மணையாள்

அருகே உன் தோள் சாய்ந்து
காதல் மொழி பகிர்ந்து
தீயினுள் உருகி நீரென பாய்ந்து
பிரியமாய் உனக்கு மோதிரம் கோர்த்து
காதோரம் தீண்டினேன் வேடகம் தொடுத்து

நிலவே நீ வானை சாய்த்து
கனவுகள் கொள்ளை கொண்டாய் திருடி
பிறை நெற்றி் மத்தியில்
என்னை முடித்து வைத்தாய் சுட்டி
விவாக வேள்விதனில்
நாம் இணைந்தது நேற்றடி
என்றும் என் சகம் நீயடி
சதகமும் உன்னோடு தானடி

Wednesday, 20 December 2017

AMD (அன்பின் மடல் -தீபிகா )

யாரும் அனுகிடா issue வென தனித்திருத்தேன்
நீ என் SO(U)LMAN என
இது வரையில் எப்பெண் சொல்லி கேட்டதில்லை
காதலின் கால் தவத்தினை கடவுளிற்கு escalate செய்தேன்
என்னை உனக்கு assign செய்தார்.

மே மாதம் மனதின் சேர்மானம்
ஜவ்வரிசி சிரிப்பழகியின் உள்ளம் சேர்ந்திடும்
GRC தேடல் இன்னும் ஓயவில்லை
பல வருடம் develop செய்தும்
உள்ளத்தை காட்ட test case இன்றி தவித்தேன்
compliance இல்லா CAB-ஆய் இசைந்தாய் நன்றி.

என் செல்லம் ஆய்ந்திடும் appraisal ற்கு
விடை சொல்லும் resolution என்னிடமில்லை
அவள் கரம் பிடித்த நொடியில்
இனி வரும் காலம் task அனைத்தும் எனதாகும்.

உடனில்லா காலை கொடும் பகல் குளிர் இரவென
முக்காலம் 3 Reminder-யாய் உன் பிரிவு சுடுகிறது
உன் முத்தங்கள் கொள்வதற்கென
இதயத்தின் sharepoint இன்னும் காலியாய் கிடக்கிறது
ரண்(ம்)தீர என் காயங்களில் முத்தமிடு போதும்.

உனக்கும் எனக்கும் பிணக்கெனில்
உடலோடு நிழல்யென ஒட்டிகொள்
problem ticket-ல் காலத்தை கழித்து விட்டு
முதல் படியில் நிற்க விரும்பவில்லை
இதழ் இரெண்டும் சேர்ந்த பின்
புதிதாய் இனி rootcause  எதற்கு?
உன் புன்னகை தேசதிற்கென
நான் roadmap செதுக்கிக்கொண்டிருக்கிறேன்.

மகேந்திரனிடம் அடை கொண்டிருந்த விக்கிரகமே
என்னோடு சம்மதித்து இந்த VDI-யில் connect ஆவாயா
அயல்நாட்டில் தவித்திடும் இப்பறவைக்கு
உன் உள்ளத்தினுள் நுழையும் VPN passcode சொல்லடி

இந்த sandalwood அழகிற்கு
redwood-ஆய் நில்லாமல் பணி செய்திடுவேன்
Service now-ஆக உடனிருந்து
உன் சேவைகள் ஏற்க முயல்வேன்.

Outlook-உம் அழகும் ஓர் நாள் ஓய்ந்திடும்
ஆனால் நம் காதலின் நேசம்
காலமும் அறிந்திடா SLA தூரம்
தீ நம்மை பிரிக்கும் வரை
வாழ்க்கையோடு fire fighter ஆக போராடுவோம்.

Monday, 4 December 2017

கேளடி கண்மணி

கருவறை சுமந்த கதைகள் அறிவாய்
ஓர் மாலையிரவின் நீல உடையில்
நம் தோள் உரசிய நினைவுகள் உண்டு அறிவாயா?
நிலம் கொண்ட காதலுக்காக
அலைகள் கரையினில் ஓய்வதில்லை
பேசாத தருணத்தையும் திறக்காத மனதையும்
மோதிப் பார்க்கும் சீற்றத்தோடு
காதல் நோயில் இரவினை கடக்கிறேன்
என் கண்மணிகென அவை கடலினுள் உறங்குதடி

நீ பிறந்த நொடியில் அழுதது போதும்
ஆறுதல் வேண்டிய அக்கணம் இருப்பேன்
வலிகளின் மறைபொருள் நானெனில்
மறுபிறவி எடுத்தேனும்
இறைவி கண்ணீர் துடைப்பேன்

புன்சிரிப்பில் நீ காணும் கனவில்
காலத்தில் துளையிட்டு
உன் புருவந்தன்னில் போரிட்டு
நெற்றி தழும்பினில் நீர் வழிய
கண்ணீர் முத்தமிட வேண்டும்

நீ கொண்ட காதலிற்கு
நிறை என்று பதிந்திட முத்தங்கள் போதாது
உன்னோடு பேசும் கதைகளுக்கு
இந்த ஓர் வாழ்க்கை போதாது
என்னை விற்றாலும் அக்கடன் தீராது
எதனை கொண்டு ஈடு செய்வேன் உன் இதயத்திற்கு?

உன்னுடைய உரிமையென
என் அனைத்தும் ஆன பின்
தனியே தருவதற்கு என்னிடம் ஏது?
அன்பெனும் அடைமொழிக்கு
வழியெங்கும் ரோஜாக்கள் நட்டிருக்கிறேன்
என்றோ ஓர் நாள் திரும்புகையில்
நீ புன்னகைப்பாய் போதும் .

Saturday, 2 December 2017

இணை

காதில் வளையமிட்டு
கன்னத்தில் கை வைத்து
கருங்கூந்தல் முத்தமிட்ட அழகே
பசும்போர்வையும் உன் பச்சிளம் புன்னகை முன்
கூச்சம் கொண்டு மறைந்தனவோ
உன் எழிலில் கரையுமென தடுப்பினை கொண்டதோ

இதயத்தின் கடவுச் சொல்லினை
காதலின் வழியே களவு கொண்டவளே
தன்னை இழந்து நீயும் அற்ற
ஒர் உலகில் இருந்து கேட்கிறேன்

"எனக்காக திறக்க மறுத்த
பல மனதின் வாசல்களில் தோற்றுவிட்டேன்
கணவனாக என் பெயர் எழுதி
இது நாள் தழுவிடாத
தாமரை கரங்களில் சிறையிடுவாயா?
உன் மேல் மையல் கொண்டவனை
"தை"யல் மருந்திடுவாயா?"

கன்னம் சிவந்து நாணம் கொள்ளும்
மயக்க மொழி அறியேன்
உன் குல பெண்கள் ஒயாஐயறும்
இலக்கண கணவனாய் நான் அறியேன்
கண் பேசி கவர்ந்திடும் கலையும் அறியேன்
என்பேசி உன்னை மணந்திட
மனம் வீசி காத்திருக்கும் ஏழை காதல்வாசி நான்

பனியில் தவித்திடும் இப்பனிப்பாடிக்கு
திங்களும் சுடுகிறது
தென்றல் கலவி கொள்ளும் அதிகாலையில்
கட்டிலில் மாரணைத்து உறக்கம் கொள்
நீரற்ற இந்த நீல நையில் நதி
உன் வெள்ளி மயில் காதோரம் உயிர் பெறும்