Sunday, 5 June 2016

காதலின் கரைதனிலே

இல்லம் நுழைகையில்
 தேநீர் கோப்பையுடன் தேடும் கண்கள்
நீயிடும் நீர்க்கோலத்தின் ஒலியலைகள்
 குளியல் அறை இலையுதிர்காலம்
ஐந்து நிமிட காத்திருப்பின் முடிவில்
 அறை நுழைய அனுமதி

தனிமையறையின் தனித்துவம்
  நுரையிரலில் தீண்டும் உன் வாசம்
அந்நாளைய கவலைதனை 
  மறைக்க பார்க்கும் அரிதாரம்
பதற்ற இதழ் சுவைக்கும் பேனா
 குறிப்புகளின் தோழனாய் மடியுறங்கும் டைரி

கரை இல்லா கரு மை தீட்டியவள்
 கடலோடு பேசவேண்டும் என்றாள்
நிலவொளியில் நிலங்குளிரும் வேளை
 கடலோடு நெருங்கி விட்டோம் என
சாறலாய் வீசப்படும் திரவமலர்கள்

நிலமகளின் இடை வளைவான கடற்கரையினை
 இயற்கையின் சந்திப்பிழையென நிறைக்கும் அலைகள்
கடலினுள் புதைந்து இருக்கும் காதலின் வலியினை
 கரை சேர்க்க பார்க்கிறதோ காற்றின் ஒலிகள்
மறுமுறை கடற்கரை சென்றால்
 மௌனத்தின் ஏற்புவாய் கொண்டு மனதை தீட்டுங்கள்
காதலின் அலைவரிசை கரையினில் மூழ்கடிக்கும்

உணர்ச்சிகள் பெருக்கெடுத்து ஓடும் பாதையில்
  நமது மௌனம் பூத்தூவி சென்றது
கற்களில் அலை தெறித்து
 அழைத்துச் சென்றது நம் வார்த்தைகளை
தோள் சாய்ந்து கொண்டே கேட்டாய் தோழி
 இந்நொடியினை பதிவு செய்வாயாயென
இதோ கடலின் நீலம் கொண்டே
 நிரப்பிவிட்டேன் நினைவுகளை.
**********************************************************************************

பொருள்:
ஏற்புவாய்- Transistor

சந்திப்பிழை-  http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-13410.html

நன்றி:
மௌனத்தில் புதைந்த கவிதைகள்-வைரமுத்து
தாழாங்குப்பம் கடற்கரை
tamilpaper.net
tamilmantram.com
thozhilnutpam.com/chollagaraathi.htm



Wednesday, 1 June 2016

யாழினியின் அப்பா

இடம்: நெசபாக்கம்(கே.கே நகர்)
தேதி: சென்ற வருடம்(2015)ல் ஒரு நாள்

அந்த நாளின் பரபரப்பில் இருந்து மீண்ட சென்னை நகரம்
இரவு 11:45.
நண்பனை பார்த்துவிட்டு தாம்பரம் வந்துகொண்டிருந்தேன்.

ஆஜந்தா பஸ் ஸ்டாண்ட் தாண்டிய சிறிது தொலைவில் ஒரு பெரிய மனிதர் கையில் துணிப்பை மற்றும் ஒரு பெரிய பார்சல் உடன் வண்டி முன்பு விழுவது போல் வந்து நின்றார்.
முழுதும் வியர்வை வழிய "சார் கொஞ்சம் பில்லர்ல இறக்கிவிடுறிங்களா" என்றார்.
மூச்சிரைப்பு, எங்கோ செல்லும் அவசரம், மனிதர் மிகவும் வியர்த்து களைத்து இருந்தார், அந்த நாளைய உழைப்பு கண்ணில் தெரிந்தது.
"வாங்க சார் உங்கள ட்ரொப் பண்றேன்" என்று இருவரும் பயணிக்க ஆரம்பித்தோம்
சாலை வேலைகள் நடந்து கொன்டிருந்ததால் மெதுவாக செல்லவேண்டிய கட்டாயம்.
கொஞ்ச நேரத்தில் அவரே பேச ஆரம்பித்தார், அவர் தமிழில் அழகான திருநெல்வேலி மண் வாசனை
(எனக்கு திருநெல்வேலி தமிழ் வராததால் சாதாரண வழக்கில் எழுதுகிறேன்)

"சார் முன்னாடி விழுந்தேனு கோச்சிக்காதிங்க, எந்த பஸ் ஆட்டோவும் இல்ல அதான், நீங்க பில்லர்ல விட்ருங்க போதும்".
"பரவாயில்லங்க ஒன்னும் பிரச்சனை இல்ல பார்த்து உட்கார்ந்துகோங்க".
"நாளைக்கு என் யாழினி பாப்பா பொறந்த நாளு அதான் லீவு போட்டு ஊருக்கு போறேன், நான் வருவேன்னு புது ட்ரெஸ் எல்லம் போட்டுகிட்டு உட்காந்து இருக்கும்".
"ஓ அப்படியா வாழ்த்துகளுங்க , இந்த நேரம் பஸ் இருக்குமா?".
"வழக்கமா போறதுதான் தம்பி, பஸ் எல்லாம் இருக்கும், எப்படியும் நாளைக்கு 1 மணிக்குள்ள போயிடுவேன், பாப்பா முகத்த பார்க்கணும் ரொம்ப நாள் ஆச்சு".

"ஓ பாப்பாவ லீவுக்கு ஊருக்கு அனுப்பிருக்கீங்களா".
"இங்க வடபழனி டாஸ்மாக்ல சேல்ஸ்மேனா இருக்கேன் தம்பி, சேர்றதுக்கு 4- 5 பேர பார்த்து பணம் குடுத்து காண்டிராக்ட்ல சேர்ந்து இருக்கேன். கடை பசங்க எல்லாம் ஒன்னா தான் ரூம் எடுத்துருக்கோம். மாச செலவுக்கே பணம் சரியா இருக்கு.
தினமும் காலைல 8 மணிக்கு வந்து லோட இறக்கி அப்புறம் நைட்டு 11,11:30 வரை கணக்கு எல்லாம் முடிச்சு சுப்பிரவைசர்ட குடுத்துட்டு வரத்துக்கு. அதுவரைக்கும் பாப்பா எனக்காக தூங்காம இருக்கும் தம்பி. அப்புறம் டாஸ்மாக்ல வேலை பாக்குரேனு பொஞ்சாதி வேணா சொல்லிகலாம் ஆன பாப்பாக்கு கூச்சமா இருக்கும். பொறந்த நாள் அதுவுமா ஆயி அப்பன் முகத்த பார்க்கனுமேனு பாப்பா ஏங்கும் அதான் போறேன்.
திரும்ப அடுத்த நாள் கடைக்கு வரனும் தம்பி"
எனக்கு பேச வார்த்தைகளே இல்லை.

அஷோக் பில்லர், KFC வாசலில் சேர்ந்தோம் , எங்களை போலவே நிறைய பேர் பஸ்சுக்காக காத்துகொண்டிருதார்கள்.

அவர் "தம்பி, பஸ் வந்துரும், நீங்க கிளம்புங்க உங்க வீட்டுல காத்துகிட்டு இருப்பாங்களே" என்றார்.
"பரவாயில்லை அண்ணா உங்கள ஏத்தி விட்டுடே போறேன்" என்றேன்.

15 நிமிடம் கடந்தது ,
"அண்ணா, நான் வேணா உங்கள கோயம்பேடுல இறக்கிவிடவா ,அங்க பஸ் இருக்கும் சீட்டும் கிடக்கும்".
"இல்ல தம்பி, இங்க கொஞ்ச நேரத்துல பஸ் வரும்".

சிறிது சிறிதாக அவர் முகத்தில் பதற்ற துளிகள்,
"தம்பி எங்க நிலமைய பார்த்திங்களா, டாஸ்மாக்னு சொன்னாலே கேவலமா நினைக்கிறாங்க. நாள் கிழமைனா(அதாவது பொங்கள்,தீபாவளி விடுமுறை)கணக்கு காட்டனும்,மட்டமான சரக்க தள்ளிவிடனும், பாட்டிலுக்கு 5ரூபா, 10ரூபா வாங்கி எல்லாம் ஆபிஸர் இருந்து அரசியல்வாதி வரை தரனும். ஒரு விசேஷம்னா கூட லீவு கிடையாது,
பல ஆயிரம் கோடி வருமானம்னு சொல்லுறாங்க ஆனா நாங்க வேலை செய்யுற எடத்த பார்த்துருக்கிங்களா? எல்லாம் பாப்பாகாக தான் தம்பி
இவளோ நேரம் கூட இருக்கீங்களே, நீங்க பத்திரமா போகனும்" என்றார் வேதனையுடன்.

பேசிக்கொண்டிருந்த போது ஒரு SETC வந்தது, எறி அமர்ந்த உடன் கை கட்டினார்.

இவரை போன்றவர்கள் ,நாம் அன்றாடம் கடந்து செல்லும் பாதையில் அருவமாய் இருப்பவர்கள்.
நாம் இயங்கும் சமுதாய வாழ்வின் ஓர் அங்கம்.
ஒரு தந்தையாக,கணவராக,சக மனிதராக என்றேனும் இவர்களின் வாழ்க்கை எப்படியுள்ளது என எண்ணி பார்க்கக்கூட நேரமில்லாமல் ஓடி கொண்டிருக்கிறோம்.
எப்பொழுதேனும் இவர்களை கடந்தால் கொஞ்சம் அன்பையும், மனிதத்தையும் தூவி விட்டு செல்லுங்கள்.

இப்பொழுது இதை பகிர காரணம் 500 டாஸ்மாக் கடைகளை மூடப்போகிறார்கள்.
மூடப்படுவதற்கு முன் இவரை போன்ற தற்காலிக ஊழியர்களுக்கு ஏதேனும் மாற்று வேலை கொடுத்தால் நலமாக இருக்கும்.

Friday, 11 September 2015

காதல் பொழுதுகள்


உறக்கம் விலகாத
ஆதிகாலை ஞாயிறு

அடுப்பங்கரையில் நம் கதை பேச
தவித்து கொண்டிருக்கும் தேனீர்
முன்புற சிமிழிலில்
அழகாய் சிரிக்கும் குங்குமம்
பின்னால் வந்து அணைக்கையில்
கொஞ்சம் இறுக்கமாய் மல்லிகை வாசம்

மிளா நினைவுகளின் நிலை கோடென
ஒற்றை காதல் விண்ணப்பம்
"எங்கேயும் கூட்டி செல்லேன் காதல் கணவா"

பனித்திரை கிழித்து சென்றது
நம் கனவு வாகனம்
சிறு குன்றின் காதல் வெளியில்
இருவரின் இதமாய் ஒற்றை சால்வை

நிறை மாத மேகத்தின் நிழலில்
சிறு விரல் ஸ்பரிசம் தூரல்களாய்
தூரத்து பச்சையின் எல்லைகள் குறித்தோம்
மறுமுறை பதிக்கும் தடங்களாய்

கூடலுடன் ஊடல் கலைந்தபின்
அந்தி பொழுதில் விடை பெற்றோம்
நாளைய நகரத்து வாழ்க்கையை நோக்கி

Thursday, 11 June 2015

ஊடல்

நீ என்னை திட்டி சென்றிருக்கலாம்
ஒன்றும் பேசாமல் சென்றதிற்கு பதிலாக..

எழுத்தாணி முனையில்
பதியத்துடிக்கும் மையை போல்
நிலத்தினை தழுவ காத்திருக்கும்
முதல் துளி மழையை போல்
காற்றின் வாசம் தேடும்
கூண்டு பறவையை போல்
இசையின் பால் கண்ணனோடு இசைந்த
ஆவின் தயை போல்

கண்மணி
உன் கை கோர்த்து
கவி பேச
கசியும் உயிர் பிடித்து
காத்திருக்கிறேன்...

Tuesday, 19 May 2015

தீரா காதல்

என்னுள் யாவுமாய் கலந்த என்னவளே..
 நான் உன்னவனாக காத்திருக்கிறேன்..

மேகத்தின் நீர் துளிகளை
     கலைகின்ற மழையினை போல்
கணத்தின் நிமிட துளிகளை
  கலைக்கிறதோ மௌனம்

இரவியனுடன் மதியவள்
  தழுவி செல்லும் வேளையில்
காலம் முழுதிற்கான
 கதை பேசிகொண்டிருப்போம்
என்றும் தீரா காதலுடன்.....

பி.கு.
இரவியன்- சூரியன்
மதி- நிலா
மேலே குறிப்பிட்ட காலம் - சூரியனும் நிலவும் தழுவி செல்லும் மாலை வேளை

Sunday, 18 January 2015

நீலம்



மீதம் இருக்கும் மார்கழியில்
நமக்காகவே அமர்ந்திருக்கும்
 கல் படுகையின் மேல்
குளிரின் நிறம் என்னவென்று வினவினாய்
இருவரின் இடைவெளியை கூர்ந்து-"நீலம்" என்றேன்

நீலம் என்றால்-
  போர்த்தி இருக்கும் ஆடையை பார்த்து இதையா “-என்றாய்

"இளம் சூரியனின் அரவணைப்பை
  தொலைத்த நிறம்- நீலம்
 தன்னுளே சிறை கொண்ட
  அலையின் ஒளியானது- நீலம்
 உயிர் பிரிந்த
   உடலானது -நீலம்
 அவள் போன்றே அரிய முடியா
  தன்மைகளும் இயற்கையில் - நீலம்" என்றேன்

ஒரு நீண்ட மெளனம்.....
  விடையின் விடயம் (அவள்) மனதில் சிதறியிருக்க
 "மனம் இறுகி ,
  அன்பினை புரியதவள் நான்-
 இந்த குளிரினைப் போல
    நம் நேசத்தின் ஆயிரத்தில் ரு நீளம் மட்டுமே நான்" என்றாள்.

இதழ் சேர்த்த புன்னகையோடு சொன்னேன்
  பிருந்தாவனத்தின் நீல வண்ணன்
  நம் எண்ணெந்தனை சேர்த்து வைப்பான்.

img source: internet

Wednesday, 21 August 2013

காத்திருக்கிறேன்

காலம்:
 காதலனுக்கும் காதலிக்கும் இடையே ஏன் காதலுக்கும் இடையே Facebook,Twitter,Skype
நுழைந்திறாத காலமது.
உணர்ச்சிகளை கடத்துவதற்கு உள்நாட்டு அஞ்சல் மட்டுமே இருந்த பொற்காலமது
முன்னுரை:
தேவதைகள் குடியிருக்கும் காதலர்களுக்கு தெரியும்
காத்திருத்தல் சுமை சார்ந்ததல்ல என்று.
       
*இதோ இன்னும் ஓர் நள்ளிரவு
 கைப்பிடித்து அழைக்கும் குழந்தையாய்- உன் நினைவு  

* மருதாணி கை தனை
 குவிந்து நீ மறைக்கையில்
 கண்ணாடிக்கு வெட்கம் தொற்றியது-ஏனடி

*பிரிவெண்பது துயரென
 நம்பியிருந்தேன்-நின்
 இதழ் பிரிந்து புன்னகைக்கும் வரையிலடி                                 

*முன்னே என்னை நண்பனுடன் போக விட்டு                                         
 பின்னே வந்து  தலையெட்டி பார்க்கும் தயக்கம் -
 என்னே ஓர் நாணமடி!

*எனக்கென்று நீ செய்த ரசத்தில்  
 கொஞ்சம் மணம் சேர்த்து சுவை கூட்டியதடி
 பொன் நிற சிறகாய்- நின் கூந்தலடி  

*கதவிடுக்கில் ஒளிந்திருந்து
 நோக்குகையில்                         
 பதற்றம் பறித்து கொண்டது- கொஞ்சம் நகங்களடி       
                                                               
*
குளக்கரை அரசரடியில்            
 கை கோர்த்து நடந்தோமே     
 இல்லாத பேய்கள் வாழ்த்துதடி

*முகவுரை முடிந்திருந்த காதலுக்கு
 மற்றுமொரு இடமாற்றம் கொண்டு
 முடிவுரை எழுதியது காலமடி
    
*
நம் உறவில் இன்னும் பிரியாமல் இருப்பது
 அந்த இறுதி கடிதத்தின் -இதழ்களடி 
     
*
மற்றொரு முறை விழிகள் பரிமாறும் வரை
 என்றும் ஒலிக்கும் நின் சிரிப்பொலியில்-
 வாழ்க்கை  நகருதடி.


நன்றி: இயக்குனர் ராம் மற்றும் படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கும்.

---காத்திருக்கிறேன் விமர்சனக்களுக்காக