தண்டவாளத்தில் ஓர் அதிர்வு ஒலி
ஏதேனும் ஒரு இரயில் கடந்திருக்கலாம்
அல்லது ஓர் இரயிலின்
வருகையினை எதிர்பார்த்திருக்கலாம்.
இரயில்கள் ஒய்வெடுக்கலாம்
எங்கேனும் ஓர்
ஆலமர நிழலில்
யாருமில்லா நிலையத்தில்
இளைப்பாறலாம்
ஆனால் பயணங்கள் ஓய்வதில்லை.
சுமந்து செல்லும் இரும்பு குதிரை
நாளை,
எவரேனும் என் பயணத்தை தொடரலாம்.
இரயில் இருக்கையின் வழியே
வெளிகாட்சிகள் யாவும்
வேகமாய் பறந்தோட
யாருக்காக காத்திருக்கிறது
இச்சாலையோர மரங்கள்.
கரையோடும் வெள்ளமென
எனை சூழும்
நினைவக பேழை
இரயிலின் தாலாட்டு
சிறு வயது சேலைத் தொட்டில்
கண் மூடி
உறங்கி போகிறேன்.
காவிரி தீவின் மேல்
வழிப்போக்கனை வருடும் குளிர்க்காற்று
உலகின் கண்களில்
மனிதனின் இரயில் ஓர் செயற்கைக் கோற்புழு.
விலகா திரை- மூடுபனியில்
கம்பீரமாய் ஸ்ரீரங்கத்து கோபுரம்
காலை துயில் எழுகிறேன்.
வழித்தடம் நின்றவுடன்
கண்களால் நன்றி கூறி
காலச்சக்கரத்தின் வேக சுழற்சியில்
கையசைத்து தொடர்கிறது புது பிரயாணம்.
புலம் பெயரும் பறவை
உடைமைகள் தூக்கி செல்கிறதா என்ன?
தீயில் கரித்துகளென
பிடித்தம் இல்லா மறுநொடி வாழ்க்கை
காலமும் வயதும் யாருக்கேனும் நிற்பதில்லை
பயணத்தின் அந்நொடி நினைவுகளோடு
விடைபெறுகிறேன் !
நன்றி மீண்டும் வருக.