Friday, 11 September 2015

காதல் பொழுதுகள்


உறக்கம் விலகாத
ஆதிகாலை ஞாயிறு

அடுப்பங்கரையில் நம் கதை பேச
தவித்து கொண்டிருக்கும் தேனீர்
முன்புற சிமிழிலில்
அழகாய் சிரிக்கும் குங்குமம்
பின்னால் வந்து அணைக்கையில்
கொஞ்சம் இறுக்கமாய் மல்லிகை வாசம்

மிளா நினைவுகளின் நிலை கோடென
ஒற்றை காதல் விண்ணப்பம்
"எங்கேயும் கூட்டி செல்லேன் காதல் கணவா"

பனித்திரை கிழித்து சென்றது
நம் கனவு வாகனம்
சிறு குன்றின் காதல் வெளியில்
இருவரின் இதமாய் ஒற்றை சால்வை

நிறை மாத மேகத்தின் நிழலில்
சிறு விரல் ஸ்பரிசம் தூரல்களாய்
தூரத்து பச்சையின் எல்லைகள் குறித்தோம்
மறுமுறை பதிக்கும் தடங்களாய்

கூடலுடன் ஊடல் கலைந்தபின்
அந்தி பொழுதில் விடை பெற்றோம்
நாளைய நகரத்து வாழ்க்கையை நோக்கி

Thursday, 11 June 2015

ஊடல்

நீ என்னை திட்டி சென்றிருக்கலாம்
ஒன்றும் பேசாமல் சென்றதிற்கு பதிலாக..

எழுத்தாணி முனையில்
பதியத்துடிக்கும் மையை போல்
நிலத்தினை தழுவ காத்திருக்கும்
முதல் துளி மழையை போல்
காற்றின் வாசம் தேடும்
கூண்டு பறவையை போல்
இசையின் பால் கண்ணனோடு இசைந்த
ஆவின் தயை போல்

கண்மணி
உன் கை கோர்த்து
கவி பேச
கசியும் உயிர் பிடித்து
காத்திருக்கிறேன்...

Tuesday, 19 May 2015

தீரா காதல்

என்னுள் யாவுமாய் கலந்த என்னவளே..
 நான் உன்னவனாக காத்திருக்கிறேன்..

மேகத்தின் நீர் துளிகளை
     கலைகின்ற மழையினை போல்
கணத்தின் நிமிட துளிகளை
  கலைக்கிறதோ மௌனம்

இரவியனுடன் மதியவள்
  தழுவி செல்லும் வேளையில்
காலம் முழுதிற்கான
 கதை பேசிகொண்டிருப்போம்
என்றும் தீரா காதலுடன்.....

பி.கு.
இரவியன்- சூரியன்
மதி- நிலா
மேலே குறிப்பிட்ட காலம் - சூரியனும் நிலவும் தழுவி செல்லும் மாலை வேளை

Sunday, 18 January 2015

நீலம்



மீதம் இருக்கும் மார்கழியில்
நமக்காகவே அமர்ந்திருக்கும்
 கல் படுகையின் மேல்
குளிரின் நிறம் என்னவென்று வினவினாய்
இருவரின் இடைவெளியை கூர்ந்து-"நீலம்" என்றேன்

நீலம் என்றால்-
  போர்த்தி இருக்கும் ஆடையை பார்த்து இதையா “-என்றாய்

"இளம் சூரியனின் அரவணைப்பை
  தொலைத்த நிறம்- நீலம்
 தன்னுளே சிறை கொண்ட
  அலையின் ஒளியானது- நீலம்
 உயிர் பிரிந்த
   உடலானது -நீலம்
 அவள் போன்றே அரிய முடியா
  தன்மைகளும் இயற்கையில் - நீலம்" என்றேன்

ஒரு நீண்ட மெளனம்.....
  விடையின் விடயம் (அவள்) மனதில் சிதறியிருக்க
 "மனம் இறுகி ,
  அன்பினை புரியதவள் நான்-
 இந்த குளிரினைப் போல
    நம் நேசத்தின் ஆயிரத்தில் ரு நீளம் மட்டுமே நான்" என்றாள்.

இதழ் சேர்த்த புன்னகையோடு சொன்னேன்
  பிருந்தாவனத்தின் நீல வண்ணன்
  நம் எண்ணெந்தனை சேர்த்து வைப்பான்.

img source: internet