Tuesday, 31 May 2016

யாழினியின் அப்பா

இடம்: நெசபாக்கம்(கே.கே நகர்)
தேதி: சென்ற வருடம்(2015)ல் ஒரு நாள்

அந்த நாளின் பரபரப்பில் இருந்து மீண்ட சென்னை நகரம்
இரவு 11:45.
நண்பனை பார்த்துவிட்டு தாம்பரம் வந்துகொண்டிருந்தேன்.

ஆஜந்தா பஸ் ஸ்டாண்ட் தாண்டிய சிறிது தொலைவில் ஒரு பெரிய மனிதர் கையில் துணிப்பை மற்றும் ஒரு பெரிய பார்சல் உடன் வண்டி முன்பு விழுவது போல் வந்து நின்றார்.
முழுதும் வியர்வை வழிய "சார் கொஞ்சம் பில்லர்ல இறக்கிவிடுறிங்களா" என்றார்.
மூச்சிரைப்பு, எங்கோ செல்லும் அவசரம், மனிதர் மிகவும் வியர்த்து களைத்து இருந்தார், அந்த நாளைய உழைப்பு கண்ணில் தெரிந்தது.
"வாங்க சார் உங்கள ட்ரொப் பண்றேன்" என்று இருவரும் பயணிக்க ஆரம்பித்தோம்
சாலை வேலைகள் நடந்து கொன்டிருந்ததால் மெதுவாக செல்லவேண்டிய கட்டாயம்.
கொஞ்ச நேரத்தில் அவரே பேச ஆரம்பித்தார், அவர் தமிழில் அழகான திருநெல்வேலி மண் வாசனை
(எனக்கு திருநெல்வேலி தமிழ் வராததால் சாதாரண வழக்கில் எழுதுகிறேன்)

"சார் முன்னாடி விழுந்தேனு கோச்சிக்காதிங்க, எந்த பஸ் ஆட்டோவும் இல்ல அதான், நீங்க பில்லர்ல விட்ருங்க போதும்".
"பரவாயில்லங்க ஒன்னும் பிரச்சனை இல்ல பார்த்து உட்கார்ந்துகோங்க".
"நாளைக்கு என் யாழினி பாப்பா பொறந்த நாளு அதான் லீவு போட்டு ஊருக்கு போறேன், நான் வருவேன்னு புது ட்ரெஸ் எல்லம் போட்டுகிட்டு உட்காந்து இருக்கும்".
"ஓ அப்படியா வாழ்த்துகளுங்க , இந்த நேரம் பஸ் இருக்குமா?".
"வழக்கமா போறதுதான் தம்பி, பஸ் எல்லாம் இருக்கும், எப்படியும் நாளைக்கு 1 மணிக்குள்ள போயிடுவேன், பாப்பா முகத்த பார்க்கணும் ரொம்ப நாள் ஆச்சு".

"ஓ பாப்பாவ லீவுக்கு ஊருக்கு அனுப்பிருக்கீங்களா".
"இங்க வடபழனி டாஸ்மாக்ல சேல்ஸ்மேனா இருக்கேன் தம்பி, சேர்றதுக்கு 4- 5 பேர பார்த்து பணம் குடுத்து காண்டிராக்ட்ல சேர்ந்து இருக்கேன். கடை பசங்க எல்லாம் ஒன்னா தான் ரூம் எடுத்துருக்கோம். மாச செலவுக்கே பணம் சரியா இருக்கு.
தினமும் காலைல 8 மணிக்கு வந்து லோட இறக்கி அப்புறம் நைட்டு 11,11:30 வரை கணக்கு எல்லாம் முடிச்சு சுப்பிரவைசர்ட குடுத்துட்டு வரத்துக்கு. அதுவரைக்கும் பாப்பா எனக்காக தூங்காம இருக்கும் தம்பி. அப்புறம் டாஸ்மாக்ல வேலை பாக்குரேனு பொஞ்சாதி வேணா சொல்லிகலாம் ஆன பாப்பாக்கு கூச்சமா இருக்கும். பொறந்த நாள் அதுவுமா ஆயி அப்பன் முகத்த பார்க்கனுமேனு பாப்பா ஏங்கும் அதான் போறேன்.
திரும்ப அடுத்த நாள் கடைக்கு வரனும் தம்பி"
எனக்கு பேச வார்த்தைகளே இல்லை.

அஷோக் பில்லர், KFC வாசலில் சேர்ந்தோம் , எங்களை போலவே நிறைய பேர் பஸ்சுக்காக காத்துகொண்டிருதார்கள்.

அவர் "தம்பி, பஸ் வந்துரும், நீங்க கிளம்புங்க உங்க வீட்டுல காத்துகிட்டு இருப்பாங்களே" என்றார்.
"பரவாயில்லை அண்ணா உங்கள ஏத்தி விட்டுடே போறேன்" என்றேன்.

15 நிமிடம் கடந்தது ,
"அண்ணா, நான் வேணா உங்கள கோயம்பேடுல இறக்கிவிடவா ,அங்க பஸ் இருக்கும் சீட்டும் கிடக்கும்".
"இல்ல தம்பி, இங்க கொஞ்ச நேரத்துல பஸ் வரும்".

சிறிது சிறிதாக அவர் முகத்தில் பதற்ற துளிகள்,
"தம்பி எங்க நிலமைய பார்த்திங்களா, டாஸ்மாக்னு சொன்னாலே கேவலமா நினைக்கிறாங்க. நாள் கிழமைனா(அதாவது பொங்கள்,தீபாவளி விடுமுறை)கணக்கு காட்டனும்,மட்டமான சரக்க தள்ளிவிடனும், பாட்டிலுக்கு 5ரூபா, 10ரூபா வாங்கி எல்லாம் ஆபிஸர் இருந்து அரசியல்வாதி வரை தரனும். ஒரு விசேஷம்னா கூட லீவு கிடையாது,
பல ஆயிரம் கோடி வருமானம்னு சொல்லுறாங்க ஆனா நாங்க வேலை செய்யுற எடத்த பார்த்துருக்கிங்களா? எல்லாம் பாப்பாகாக தான் தம்பி
இவளோ நேரம் கூட இருக்கீங்களே, நீங்க பத்திரமா போகனும்" என்றார் வேதனையுடன்.

பேசிக்கொண்டிருந்த போது ஒரு SETC வந்தது, எறி அமர்ந்த உடன் கை கட்டினார்.

இவரை போன்றவர்கள் ,நாம் அன்றாடம் கடந்து செல்லும் பாதையில் அருவமாய் இருப்பவர்கள்.
நாம் இயங்கும் சமுதாய வாழ்வின் ஓர் அங்கம்.
ஒரு தந்தையாக,கணவராக,சக மனிதராக என்றேனும் இவர்களின் வாழ்க்கை எப்படியுள்ளது என எண்ணி பார்க்கக்கூட நேரமில்லாமல் ஓடி கொண்டிருக்கிறோம்.
எப்பொழுதேனும் இவர்களை கடந்தால் கொஞ்சம் அன்பையும், மனிதத்தையும் தூவி விட்டு செல்லுங்கள்.

இப்பொழுது இதை பகிர காரணம் 500 டாஸ்மாக் கடைகளை மூடப்போகிறார்கள்.
மூடப்படுவதற்கு முன் இவரை போன்ற தற்காலிக ஊழியர்களுக்கு ஏதேனும் மாற்று வேலை கொடுத்தால் நலமாக இருக்கும்.